இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல் நடத்தி அழித்ததாக சொன்ன பாலகோட் பகுதியில் 500 தீவிரவாதிகளுக்கு மேல் பயிற்சி பெறுவதாகவும், அவர்கள் காஷ்மீருக்குள் ஊடுருவத் திட்டமிட்டிருப்பதாகவும் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அப்படி ஊடுருவினால், முன்பு நடத்திய தாக்குதலைக் காட்டிலும் பயங்கரமான தாக்குதலை இந்தியா நடத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறுவனத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தத் தகவலை தெரிவித்தார். தீவிரவாதிகளை கட்டுப்படுத்த ஏற்கெனவே நடத்திய தாக்குதலைக் காட்டிலும் பெரிய தாக்குதல் நடத்தவும் தயங்கமாட்டோம். காஷ்மீரில் இயல்பான நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. தீவிரவாதிகள் தவறாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவே தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தனி நபர்களும், குடும்பங்களும் சந்திக்க அனுமதி கொடுத்தால் அதையும் தவறாக பயன்படுத்தக்கூடும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பிபின் ராவத் தெரிவித்தார்.