
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறியது. இதனால் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்தக் கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்திருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருந்தார். இருப்பினும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வன்முறை, கலவரங்கள் ஏற்பட்டு பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தக் கொடுர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணியின் கணவரான ஒய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் இந்தச் சம்பவம் குறித்து தெரிவிக்கையில், “இந்த தேசத்தை காப்பற்ற முடிந்த தன்னால் மே மாதம் 4 ஆம் தேதி நடந்த கொடுமையில் இருந்து தனது மனைவியைக் காப்பற்ற முடியவில்லை. இந்தக் கொடுமையைத் தடுக்காமல் காவல் துறையினர் வேடிக்கை பார்த்தனர். பணி ஓய்வு பெற்ற பிறகு தனது மனைவியையும், சொந்த கிராமத்தையும் காப்பாற்ற முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் போது கார்கில் போரிலும், இந்திய அமைதிப்படையில் இலங்கையிலும் பணியாற்றியவர் ஆவார்.
மேலும், மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து குக்கி சமூகத்தைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “மணிப்பூர் வன்முறையில் குக்கி சமூகத்தவர்கள் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர். இம்பாலில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி இனத்தை சேர்ந்த மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளனர்” என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.