மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லையில் முற்றுகையிட்டுள்ள அவர்கள், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இருப்பினும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறப்போவதில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்தநிலையில், வரும் நவம்பர் 26ஆம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடங்கி ஒரு வருடம் நிறைவடையவுள்ளது.
இந்தநிலையில், சிங்கு எல்லையில் நேற்று (09.11.2021) விவசாயிகள் கூடி, தங்களது போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில், நவம்பர் 26ஆம் தேதியன்றும், அதன் பிறகும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி ஒரு வருடம் ஆனதைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளனர். டெல்லி மற்றும் டெல்லி எல்லைகள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடங்கி ஒரு வருடம் ஆனதை அனுசரிக்க அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
மேலும், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 29 முதல் டிசம்பர் 23ஆம் தேதிவரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரைத்துள்ள நிலையில், நவம்பர் 29ஆம் தேதிமுதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும்வரை தினமும் 500 விவசாயிகள் ட்ராக்டரில் நாடாளுமன்றத்தை நோக்கி செல்வார்கள் எனவும், அவர்கள் அமைதியுடனும் ஒழுக்கத்துடனும் செல்வார்கள் எனவும் விவசாய போராட்டங்களை நடத்தும் 40 வேளாண் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.