வீட்டுக்காவலில் இருந்து விடுக்கப்பட்டுள்ள ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியை, ஃபரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லா இன்று நேரில் சந்தித்து பேசினர்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி 14 மாதங்கள் தடுப்பு காவலுக்கு பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கு வழிவகை செய்யும் 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. அதனைத்தொடர்ந்து அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இவர்களில் பெரும்பாலானோர் ஓராண்டுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட நிலையில், மெகபூபா முஃப்தி விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக அண்மையில் உச்சநீதிமன்றம் அரசுக்கு பிறப்பித்த உத்தரவில், மெகபூபா முஃப்தி விடுதலை குறித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. இதனையடுத்து 14 மாத தடுப்பு காவலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் மெகபூபா முஃப்தியை ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஒமர் அப்துல்லா, "14 மாதங்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்ட பின்னர் மெகபூபா முஃப்தி நேற்று விடுவிக்கப்பட்டார், எனவே நாங்கள் அவரை பார்க்க வந்தோம். எங்களது இந்த சந்திப்பில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.