
சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் (30.08.2024) பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், “தனது மகள் (10 வயது சிறுமி) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதே சமயம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், குற்றவாளியை விரைந்து கைது செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதோடு உயர்நீதிமன்றம் இது தொடர்பாகத் தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதன்படி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் வழக்கை, மத்திய புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ.) மாற்றம் செய்து விசாரணை செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், தமிழ்நாடு காவல்துறையில் சிறப்புப் புலனாய்வு பிரிவு அமைத்து விசாரணை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோவை பொது வெளியில் பரப்பியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், “சிறுமியின் வீடியோ மற்றும் ஆடியோவை பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி அதனைப் பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.