
வட மாநிலங்களில் பனிக் காலம் முடிந்து அடுத்து வரும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது வட மாநில இந்து சமூக மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் இந்த வசந்த காலத்தை வண்ண மயமாக வரவேற்க ஒருவர் மீது ஒருவர் எந்தவித வேறுபாடுமின்றி வண்ணப் பொடிகளைப் பூசிக் கொண்டாடுவர். அன்றைய நாளில், அனைவர் முகத்திலுமே வண்ணங்கள் ஒட்டிய பெரு மகிழ்ச்சி இருக்கும்.
இந்த நிலையில், ஹோலி பண்டிகையின் முஸ்லீம்களுக்குப் பிரச்சனை இருந்தால் வீட்டிலேயே இருங்கள் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிஸ்ஃபி சட்டமன்றத் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரிபூசன் தாக்கூர் பீகார் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “முஸ்லிம்களிடம் ஒரு வருடத்தில் 52 வெள்ளிக்கிழமைகள் உள்ளன. அவற்றில் ஒன்று ஹோலி பண்டிகையோடு ஒத்துப் போகிறது. எனவே, அவர்கள், இந்து மக்களை ஹோலி பண்டிகையைக் கொண்டாட அனுமதிக்க வேண்டும். அவர்கள் மீது வண்ணங்கள் பூசப்பட்டால் கோபப்படக்கூடாது. அவர்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு இது அவசியம்” என்று கூறினார். இவரின் சர்ச்சை பேச்சுக்கு, மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.