
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சர் லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலை குறுக்கே நின்றது. சாலையின் நடுவே லாரி நிறுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் சக வாகன ஓட்டிகளும் அருகில் இருந்த பொதுமக்களும் சென்று விசாரித்தபோது, லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, லாரியிலிருந்து இறங்கிய ஓட்டுநர், லாரியை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எடுக்காமல், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ரகளை செய்தார். இதில் கோபமடைந்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர், அவரை தட்டி கேட்டு அவரிடம் இருந்து லாரியின் சாவியை பெற்று லாரியை அப்புறப்படுத்தினர். தகவல் அறிந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர், லாரியை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், மதுபோதையில் வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் கலவை பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது.
குடிபோதையில் வாகனத்தை இயக்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது தொடர்பாக ஓட்டுநர் தங்கராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.