உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், டெல்லியில் இன்று (01/03/2022) செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, "போலந்து வழியாக உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியின் முதல் தவணையாக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற நிவாரணப் பொருட்கள் ஆகியவை அடங்கிய சரக்கு விமானம் இன்று (01/03/2022) இரவு புறப்பட்டது. நாளை (02/03/2022) மற்றொரு சரக்கு விமானம் போலந்து வழியாக உக்ரைனுக்கு செல்லும்.
இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக அடுத்த மூன்று நாட்களில் 26 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் புகாரெஸ்ட் மற்றும் புடாபெஸ்ட்டுக்கு மட்டுமின்றி போலந்தில் இருந்தும் இயக்கப்படவுள்ளது. விமானத்திற்காக 4,000 முதல் 5,000 பேர் வரை காத்திருக்கிறார்கள்.
நாங்கள் எங்களின் முதல் ஆலோசனையை வழங்கிய நேரத்தில் உக்ரைனில் 20,000 இந்திய மாணவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கையில் இருந்து சுமார் 12,000 பேர் உக்ரைனை விட்டு பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர். இது உக்ரைனில் இருந்த இந்தியர்களில் 60% ஆகும். உக்ரைனில் இருந்து தப்பிய சுமார் 1,700 இந்தியர்கள் போலந்து நாட்டில் உள்ளனர். மீதமுள்ள 40% பேரில் பாதி பேர் கார்கிவ், சுமி பகுதியில் கடும் தாக்குதல் நடைபெறும் இடத்தில் உள்ளனர். மற்ற பாதி பேர் உக்ரைனின் மேற்கு எல்லைகளை அடைந்துள்ளனர் (அல்லது) உக்ரைனின் மேற்குப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவை பொதுவாக சண்டை பகுதிகளுக்கு வெளியே உள்ளன:
தலைநகர் கீவ்வில் இருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். கீவ்வில் இந்தியர்கள் யாரும் இல்லை; யாரும் கீவ்வில் இருந்து தொடர்பு கொள்ளவில்லை. உயிரிழந்த மாணவர் நவீனின் உடல் பல்கலைக்கழகத்தில் உள்ள உடற்கூறு ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவர் நவீன் இன்று காலை கர்நாடகாவில் உள்ள தனது பெற்றோரிடம் பேசினார்.
கடுமையான சண்டை நிலவும் பகுதிகளில் இருந்து நமது இந்தியர்களை வெளியேற்றுவது மட்டுமில்லாமல், நவீனின் உடலையும் கொண்டு வருவோம். இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.