உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில், கரும்பு வளர்ச்சி சர்க்கரை ஆலைகள் வளர்ச்சி துறை அமைச்சராக சஞ்சய் சிங் கங்வார் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில், இவர் பிலிபட்டில் உள்ள நவ்காவா பகடியாவில் பசுக்கள் காப்பகம் ஒன்றை நேற்று (13-10-24) திறந்து வைத்தார். அதன் பிறகு, அங்குள்ள மக்களிடம் பேசிய இவர், “ரத்த அழுத்த நோயாளி இங்கு இருந்தால், இங்கு பசுக்கள் உள்ளன. அந்த நபர் தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு பசுவை அதன் முதுகில் செல்லமாக தடவ வேண்டும். அப்படி செய்தால், அந்த நபர் இரத்த அழுத்தத்திற்கு 20 மில்லிகிராம் மருந்தை எடுத்துக் கொண்டால், அது 10 நாட்களுக்குள் 10 மில்லி கிராமாக குறையும்.
புற்றுநோயாளி ஒருவர் மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து அங்கேயே படுத்துக் கொண்டால், புற்றுநோயைக் கூட குணப்படுத்த முடியும். மாட்டு சாணம், புண்ணாக்குகளை எரித்தால், கொசு தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். எனவே, ஒரு பசு உற்பத்தி செய்யும் அனைத்தும், ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும்” என்று பேசினார். மாட்டுத் தொழுவத்தில் படுத்தால் புற்றுநோய் குணமாகும் என்று இவர் பேசிய பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.