நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள காலா திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டு 2 மணி நேரத்தில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவுப்புக்கு பின் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் காலா திரைப்படம் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கே ரசிகர் காட்சிகள் திரையிடப்பட்டது.
இந்நிலையில் ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்டு முடிவடைவதற்குள்ளே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் காலா திரைப்படம் வெளியானது. திரைப்படம் வெளியாகி இரண்டு மணி நேரத்திற்குள் இணையதளத்தில் படம் வெளியான சம்பவம் தயாரிப்பாளர்கள், திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நேற்று, காலா முழு திரைப்படத்தையும், ரசிகர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து பேஸ்புக்கில் நேரலை செய்தார். இதைக்கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனைக்கண்டித்து பலரும் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் கண்டனங்களை பதிவு செய்ய, நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் பேஸ்புக்கில் நேரலை செய்த அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக டிவிட்டரில் தெரிவித்தார்.
இப்படி பேஸ்புக் நேரலை, தமிழ்ராக்கர்ஸ் இணைதள வெளியீடு என தகவல் தொழில்நுட்ப குற்றங்களால் காலாவின் எதிர்ப்பார்ப்புகள் காலாவதியாகிவிட்டது.