Skip to main content

தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு - மத்திய அரசின் வழக்கு முடித்து வைப்பு

Published on 06/09/2018 | Edited on 06/09/2018
su

 

சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1999ம் ஆண்டில் குண்டுவெடிப்பு மூலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

p

 

ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கும் 1999ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் மரண  தண்டனை விதித்தது.  ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 


இதில், 2000ம் ஆண்டில் நளினியின் கருணை மனுவை ஏற்ற தமிழக ஆளுநர், அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டார். இதன்பின்னர் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசுத்தலைவர் நீண்ட காலம் எடுத்துக்கொண்டதால்  2012ல் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது உச்சநீதிமன்றம்.    இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டில் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு எடுத்தது.   இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.  ஆனால்,  சிபிஐ விசாரித்த வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம்  மாநில அரசிற்கு இல்லை என்று கூறி, 7 பேரை விடுவிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் கடிதம் குறித்து மூன்று மாதங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.    ஆனால், 7 பேரையும் விடுதலை செய்வதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. 

 

  இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை  நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறிய  நீதிபதிகள்,  விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம்  என்றும், பரிந்துரையின் மீது முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்றும் கூறிய நீதிபதிகள்,  மத்திய அரசின் வழக்கை முடித்து வைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

 நீட் முறைகேடு வழக்கு; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சரமாரி கேள்வி!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Supreme Court Chief Justice Chandrachud questioned NEET malpractice case

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன. 

அதே சமயம், நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில் இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் இன்று (18.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நீட் தேர்வு வினா - விடைகளை, மே 5ம் தேதி காலையிலேயே மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படியென்றால் மே 5ம் தேதிக்கு முன்பே யாரோ ஒருவர் அனைத்து வினாக்களுக்கும் விடையை தயார் செய்திருக்கிறார்.

இது உண்மையாக இருந்தால், மே 4ம் தேதி இரவே வினாத்தாள் கசிந்துள்ளது. இதில் 2 சாத்தியக்கூறுகள் உண்டு. ஒன்று, வங்கி லாக்கருக்கு அனுப்பிவைக்கும் முன்பே வினாத்தாள் கசிந்திருக்க வேண்டும். அல்லது தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும்போது கசிந்திருக்க வேண்டும். எனவே மே 3 - 5 தேதிகளுக்குள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதில் சரியாக எப்போது கசிந்தது என்பதுதான் கேள்வி” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

மேலும் அவர், “நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட நாளை மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.  மேலும், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று வரும் 20ம் தேதி பிற்பகல் வரை காலக்கெடு விதித்து உத்தரவிட்டார். 

Next Story

‘நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது’ - உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
'NEET re-examination cannot be ordered' - Supreme Court takes action

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

அதே சமயம் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில் இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் இன்று (18.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “லட்சக்கணக்கான மானவர்கள் இந்த வழக்கு விசாரணைக்காக காத்திருக்கிறார்கள்.

இது சமூக சீர்கேடுகள் தொடர்பான விவகாரம் என்பதால் நீட் தேர்வு வழக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்த நீட் தேர்வு முறையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்ற உறுதியான தகவல் கிடைத்த பிறகே இது குறித்து முடிவு எடுக்கப்படும். எனவே  அதுவரை நீட் தேர்வுக்கான மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது. நீட் தேர்வில் ஒரு சில மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பாகத் தான் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார் இதனையடுத்து வாதங்கள் நடைபெற்று வருகின்றன.