புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடக்கவிழாவில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பன்றிக்காய்ச்சலுக்கு தேவையான மாத்திரைகள் இருப்பு உள்ளது. மேலும் விழிப்புணர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் ஒவ்வொரு பகுதியிலும் தங்கி இருந்து ஆய்வுகள் செய்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றார்.
விழா மேடையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் புதுக்கோட்டை தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு பள்ளி வளாகத்திற்குள் வந்து தலைமை ஆசிரியர் அறையில் காத்திருந்தார். அப்போதே அங்கு பரபரப்பு எற்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கரை பார்க்க தி.மு.க எம்.எல்.ஏ வந்து காத்திருக்கிறார் என்றனர் அங்கு நின்றவர்கள். இந்த நிலையில் எம்.எல்.ஏ தலைமை ஆசிரியர் அறையில் காத்திருக்கும் தகவல் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது.
விழா முடிந்த பிறகு தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை ஆசிரியர் அறைக்கு வந்தார். அவருக்கு எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு மலர்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தார். அதை படம், மற்றும் வீடியோ எடுக்க முயன்றனர் பத்திரிக்கையாளர்கள். உடனே முகத்தை திருப்பிக் கொண்ட எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு படம் எடுக்க வேண்டாம் என்று கூறி துண்டை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டார்.
அமைச்சர் சென்ற பிறகு வெளியே வந்த பெரியண்ணன் அரசு எம்.எல்.ஏ.. நான் இந்த அரசுப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் என்ற முறையில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கேட்பதற்காக வந்து அவரை சந்தித்தேன். இது ரகசிய சந்திப்பு இல்லை. மாணவிகளின் நலனுக்கான சந்திப்பு தான் என்றவரிடம் எதிர்கட்சியான உங்கள் தி.மு.க தலைமை ஆளுங்கட்சி தரப்பை முழுமையாக எதிர்த்து வரும் வரும் நிலையில் நீங்கள் ஆளுங்கட்சி அமைச்சரை சந்தித்திருப்பது பற்றி என்று கேள்வி எழுப்ப.. அதற்கு பதில் சொல்லாமலேயே சென்றார்.
இந்த சம்பவம் புதுக்கோட்டை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் விபரம் அறிந்த மேலும் சிலர்.. அமைச்சர் விஜயபாஸ்கர் - பெரியண்ணன் அரசு எம்எல்.ஏ எப்பவும் கட்சி பாகுபாடின்றி நட்பாக இருப்பார்கள். அதனால் தான் புதுக்கோட்டை தொகுதியில் பல வேலைகள் நடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குடிதண்ணீர் சம்மந்தமான ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கணேஷ் மாவட்டத்தில் உள்ள மற்ற தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை என்று திருமயம் ரகுபதியும், ஆலங்குடி மெய்யநாதனும் ஆய்வு மாளிகைக்கு வந்து சத்தம் போட்டனர். ஆனால் அன்றே அடுத்த சில மணி நேரத்தில் பெரியண்ணன் அரசு எம்.எல்.ஏ வை சந்திக்க அமைச்சர், ஆட்சியர், அ.தி.மு.க மா.செ உள்ளிட்டவர்கள் நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்து சந்தித்து நலன் விசாரித்ததுடன் கோரிக்கைகளையும் கேட்டுச் சென்றனர். அப்படி ஒரு நட்பு அவர்களுக்குள்.
ஆனால் இது தி.மு.க வில் மற்றவர்களுக்கு பிடிக்காது. அரசியல் எதிரியாக பார்க்கப்படுபவருடன் தொடர்ந்து உறவில் இருப்பதா? என்று கட்சி தலைமை வரை புகார் வாசித்தனர். அதன் பிறகு கடந்த மாதம் புதுக்கோட்டை தெற்கு, வடக்கு தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க அமைச்சர், எம்.எல்.ஏ உள்ளிட்ட யாருடனும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தீர்மானமே எழுதினார்கள். அந்த தீர்மானம் பெரியண்ணன் அரசு எம்.எல்.ஏ வுக்கு பொருந்துமா? என்பது கேள்விக்குறியாக்கிவிட்டார் இன்றைய சந்திப்பில் என்றனர்.
அரசியல் வட்டாரத்தில் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் சந்திப்பது அபூர்வம் தான். ஆனால் புதுக்கோட்டையில் அந்த அபூர்வம் அடிக்கடி நடக்கும்.