
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பெயரளவிற்குத்தான் தலைமைச் செயலாளராக இருக்கிறார். உண்மையானத் தலைமைச் செயலாளர், ஐ.ஏ.எஸ் கிரேடில் உள்ள முதல்வரின் செயலாளர்தான். சமீபத்தில் டி.ஆர்.ஓ அந்தஸ்தில் இருந்த பலர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றார்கள்.
அப்படி பதவி உயர்வுபெற்ற 16 பேரில் சிலர் நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். அப்படி பெரிய பதவிகளில் நேரடி ஐ.ஏ.எஸ் இல்லாத அதிகாரிகளை நியமிக்க மாட்டார்கள்.
இப்படி வரம்பு மீறி பதவிகள் வழங்கப்படுவதற்கு காரணம், இவர்தான் என ஐ.ஏ.எஸ் வட்டாரத்தில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தப் பதவிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் கைமாறி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வரும் வாரம் துறைச் செயலாளர்களின் பதவி மாற்றம் நடைபெறுகிறது. அதற்காக, முதல்வர் அலுவலகத்தில் கோடிக்கணக்கில் வசூல் நடைபெற்று வருகிறது.
முதல்வர் செயலாளரின் இந்தச் செயல்களால் தலைமைச் செயலாளர் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். மத்திய அரசுடன் நெருக்கமாக இருந்து இரண்டு முறை பதவி நீட்டிப்பு பெற்றுள்ள தலைமைச் செயலாளர் ஒய்வு பெற்றவுடன் மத்திய அரசின் தீர்ப்பாயங்களில் தலைவராகப் போவதற்குத் திட்டமிடுகிறார். அவருடைய சேவையை மத்திய அரசு விரும்புகிறது என்கிறார்கள், மத்திய அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.