தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் இன்று (26-11-24) அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை (27-11-24) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்பதால், சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தரங்கம்பாடி அரசு மருத்துவமனை வளாகம் முன்பு தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பொழிந்து வருகிறது. தரங்கம்பாடி தாலுகாவில் காலை 8 மணிக்கு இருந்து மதியம் 2 மணி வரை 93 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் மயிலாடுதுறையில் பல இடங்களில் தாழ்வான இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் கனமழை காரணமாக தரங்கம்பாடி அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.