தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் இன்று (26-11-24) அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை (27-11-24) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டாவை சேர்ந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் கனமழை எச்சரிக்கைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அதி கனமழை காரணமாக நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (26-11-24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (26-11-24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.