Skip to main content

"என்ன பன்னீர்செல்வம் நாம 35 சீட்டுதான் ஜெயிப்போமாம்" விரட்டிய ஜெயலலிதா... நடுங்கிய ஓபிஎஸ் - நினைவுகளை பகிரும் அஸ்பியர் சுவாமிநாதன்!

Published on 17/11/2021 | Edited on 18/11/2021

 

ிு


அதிமுகவில் தகவல் தொழில் நுட்ப பிரிவு உருவாக்கப்பட்டு அதன் முதல் செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகாலம் அதில் முதன்மையாக பணியாற்றி வந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த நிலையில் அவரின் விலகளுக்கு என்ன காரணம், ஜெயலலிதாவுடனான அவரின் சந்திப்பு குறித்த கேள்விகளை நாம் அவரிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் முதல் செயலாளராக உங்களை நியமித்தது அதிமுக தலைமை. ஜெயலலிதா இருந்தவரை அந்த பொறுப்பில் ஆக்டிவாக இருந்தீர்கள், பிறகு பன்னீர்செல்வத்துடன் நல்ல தொடர்பில் இருந்த நீங்கள் என்ன காரணத்துக்காக அதிமுகவில் இருந்து விலக நேர்ந்தது? 

 

2014ம் ஆண்டு இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் நினைத்து பார்க்காத வகையில் அதிமுகவில் கட்சிக்குள் தகவல் தொழில்நுட்ப பிரிவு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் செயலாளராக புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்கள் என்னை நியமித்தார். அப்போது அவர் முதல்வராக பணியாற்றி வந்தார். இந்த நியமனத்தை அவர் எவ்வாறு செய்தார் என்பதை கூற விரும்புகிறேன். நான் அவரிடம் தகவல் தொழில்நுட்ப தொடர்பாக 5 நிமிடங்கள் பேச வேண்டும் என்று முன் அனுமதி வாங்கி இருந்தேன். அவர் எனக்கு மதியம் 2 மணி வாக்கில் அனுமதி அளித்தார்கள். நான்கு நிமிடங்கள் நான் தகவல்களை அவருக்கு சொல்லலாம் என்றும், ஒரு நிமிடம் அவர் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லலாம் என்றும் திட்டம் வைத்திருந்தேன். ஆனால் நான் கிட்டதட்ட 1.56 மணி நேரம் தொடர்ந்து நான் பேசுவதை அவர்கள் கேட்டார்கள். பல தகவல்களை என்னிடம் கேட்ட அவர்கள், இறுதியாக இந்த தேர்தலில் நாம் எத்தனை தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று கேட்டார்கள். நான் 35 தொகுதியில் வெற்றி பெற சாத்தியம் உள்ளது. இரண்டு தொகுதியில் வெற்றி கடினம், இரண்டு தொகுதியில் முடிவை நாம் கடினமாக உழைத்தால் மாற்றலாம் என்று கூறினேன்.

 

அமைதியாக இருந்த அம்மா, எந்த தொகுதியில் நாம் தோல்வி அடைவோம் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டார், நான் தர்மபுரி, கன்னியாகுமரி என்றேன், எந்த தொகுதியில் கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டார், நான் மத்திய சென்னை, கோவை என்றேன். சிறிது நேரத்தில் பன்னீர்செல்வத்திடம் நாம் இரண்டு தொகுதியில் தோற்போம் என்கிறார் என்று சொன்னார். உடனே இல்லை அம்மா, நாம் கடினமாக உழைத்திருக்கிறோம், பாண்டியை சேர்ந்து 40 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெறுவோம் என்று கூறினார்.  அம்மா அவர்கள் என்னிடம் நீங்கள் போகலாம் என்று கூறினார். உடனே நான் நன்றி என்று கூறிவிட்டு, அம்மா நீங்கள் உலக தலைவர்கள் எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல் பிரபலம், உங்கள் முன்பு என்னால் பொய் கூற முடியாது. அதனால் தான் உண்மையைக் கூறினேன். நன்றி என்று கூறிவிட்டு தலைமைச்செயலகத்தில் இருந்து வெளியே வந்தேன்.

 

வெளியே வந்த நான் கார் பார்க்கிங் செல்வதற்காகச் சென்ற நிலையில், திடீரென போயஸ் கார்டனில் இருந்து கால் வந்தது. நாளை காலை அம்மா அவர்கள் உங்களை 9 மணிக்கு வந்து பார்க்கச் சொல்கிறார்கள். நான் என்னிடம் பேசியவரிடம் இப்போதுதான் என்னை வெளியே போ என்று கூறினார்கள், நீங்கள் இப்படி சொல்கிறீர்களே என்று கேட்டேன். அவர், வெயிட் பண்ணுங்கள், உறுதி செய்துவிட்டு மறுபடியும் அழைக்கிறேன் என்றார். மீண்டும் அவர் அழைத்து நீங்கள் அவரிடம் உண்மையைப் பேசியது அவருக்குப் பிடித்துள்ளது. உங்களை நாளைக்கு வர சொல்கிறார்கள் என்றார்.

 

நான் அடுத்த நாள் காலை 8.45 மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன். முதல்நாள் கோட் போட்டு போயிருந்த நிலையில், அன்று காலை சாதாரண சட்டை, பேண்ட் அணிந்து சென்றேன். சரியாக 9 மணிக்கு வந்த அவர், என்னிடம் உங்களுக்கு அதிமுக உறுப்பினர் கார்டு தர வேண்டும் என்று விரும்புகிறேன். நான் அதிர்ச்சி அடைந்தேன், என்னம்மா உங்களிடம் உறுப்பினர் கார்டு வாங்க ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கும் போது எனக்கு நீங்கள் கொடுக்க விரும்புகிறேன் என்று கூறுவது பெருமையாக இருக்கிறது என்று என்னை கிள்ளிப் பார்த்தேன். பிறகு அவரே ஒரு அறிக்கை வெளியிடுமாறு பூங்குன்றனிடம் தெரிவித்தார். அதில் சில திருத்தத்தைக் கூறி, கழகத்தில் புதிதாக ஐ.டி விங்க் ஏற்படுத்தப்பட்டு அதன் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. 

 

பிறகு 2016ம் ஆண்டு தேர்தலின் போது ஆலோசனைக் கூட்டத்தில் என்னிடம் வெற்றி வாய்ப்பு குறித்துக் கேட்டார்கள். நான் 1 முதல் 2 சதவீதத்தில் நாம் வெற்றிபெறுவோம் அல்லது தோல்வி அடைவோம் என்று கூறினேன். அன்றைக்கு சாய்ந்திரமே என்னைக் கட்சியில் இருந்து நீக்கினார்கள். சில நாட்கள் கழித்து அவரே என்னிடம் கட்சி வேலையைப் பாருங்கள், அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்றார். அதன் பிறகு முழு மூச்சாக கட்சியில் பணியாற்றினோம். நான் கூறிய வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக வெற்றிபெற்றது. அமைதி, வளம், வளர்ச்சி என்ற வார்த்தை நான் உருவாக்கியதுதான், அது நல்ல முறையில் மக்களிடம் சென்றடைந்தது. அதிமுகவும் வெற்றிபெற்றது. பிறகு அம்மா மருத்துவமனைக்கு செல்கிறார்கள், பிறகு இறந்துவிடுகிறார்கள். அன்றைக்கு பொருளாளராகவும் முதல்வராகவும் இருந்த அண்ணன் பன்னீர்செல்வம் பின்னால் நாங்கள் சென்றோம். கூவத்துரில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் போன் நம்பரை ஒரு 50 லட்சம் பேருக்கு ஷேர் செய்து, அவர்களின் போன் ஜாம் ஆகி  அங்கிருந்த சிலர் இங்கே வந்த சம்பவங்களும் நடைபெற்றது. இது அனைத்தும் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். அந்த ஏழு மாதமும் பன்னீர்செல்வம் தொடர்பான அனைத்து மீடியா தொடர்புகளையும் நான்தான் பார்த்தேன். 

 

பிறகு இரண்டு அணிகளும் இணைந்தது. ஒருநாள் பன்னீர்செல்வம் நான் உள்ளிட்ட 5 முக்கிய நபர்களைக் கூப்பிட்டு இனி அதிமுக, இரட்டை இல்லை என்ற எண்ணம் தான் அவங்களுக்கு இருக்க வேண்டும், இபிஎஸ் , ஓபிஎஸ் அணி என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. ஆகையால் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை பாருங்கள் என்று கூறினார். நானும் அந்த மனநிலையில் தான் இருந்தேன். பிறகு 2020ம் ஆண்டு வாக்கில் 5 மண்டலமாக பிரித்து என்னை சென்னை மண்டலத்துக்கு செயலாளராக போட்டார்கள்.

 

நான் அவரிடம் மாநில பொறுப்பிலிருந்த என்னை மண்டலத்துக்கு செயலாளராக போடுகிறீர்களே என்று கேட்டேன். அவர், வேலையை பாருங்கள், இதை பெரிதுபடுத்த தேவையில்லை என்று கூறினார். நானும் சரி, அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இவ்வாறு செய்திருக்கலாம் என்று நினைத்து அதை ஏற்றுக்கொண்டேன். பிறகு சில மாதங்களுக்கு பிறகு சென்னை மண்டலத்தில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களை கோவை மண்டலத்துடன் இணைத்தார்கள். எதற்காக இந்த மாற்றம் என்று நான் கேட்டபோது யாரும் தெரியாத மாதிரி பதில் அளித்தார்கள். 

 

சரி, இதற்கு மேலும் நான் கட்சியில் நாம் பணியாற்ற கூடாது என்று முடிவெடுத்து ராஜினாமா செய்வது என்ற முடிவுக்கு வந்தேன். இதற்காக அவர்கள் இருவரையும் சந்திக்க நேரம் கேட்டேன். அவர்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடப்பதால் கூட்டத்தொடர் முடிந்த உடன் அன்று மாலை 5 மணிக்கு வந்து பாருங்கள் என்று கூறினார்கள். நானும் ஒரு வாரம் தானே என்று காத்திருந்த போது, திடீரென தமிழக தேர்தல் தேதியை அறிவித்தார்கள். இப்போது போய் ராஜினாமா கொடுத்தால் நன்றாக இருக்காதே என்று நினைத்து நான் என் வழக்கமான பணியை பார்க்க துவங்கினேன். குறிப்பாக 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்த போதே இது நிற்காது என்று இருவருக்கும் நோட் அனுப்பினேன். இருந்தாலும் அரசியல் காரணங்களுக்காக அதனை நிறைவேற்றினார்கள். பிரச்சாரத்தில் இபிஎஸ் இது உறுதியானது என்று பேசுகிறார், தென் மாவட்டங்களில் பன்னீர் செல்வம் பேசும் போது இது தற்காலிகமானது என்று கூறுகிறார். இதில் என்ன ஸ்டேண்ட் எடுத்து நான் பணியாற்ற முடியும். பிறகு சில மாதங்களுக்கு பிறகு என்னுடைய ராஜினாமா கடிதத்தை இருவருக்கும் அனுப்பினேன். 10 நாட்களுக்கு பிறகும் அதுதொடர்பாக எந்த தகவலும் என்னிடம் கூறவுமில்லை. இதற்கு மேலும் காத்திருக்க முடியாது என்று கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நானே விலகினேன். 7 ஆண்டு கால அதிமுகவில் இருந்து நான் இவ்வாறு தான் வெளியேறினேன். 

 

 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.