
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த மார்ச் 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பின் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (21.04.2025) நடைபெற்று வருகிறது. அதன்படி கேள்வி நேரத்தில் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி அதிமுக உறுப்பினர் பொன். ஜெயசீலன் கூடலூர் தொகுதியில் டைடல் பார்க் அமைத்து தரக் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதலளித்து பேசுகையில், “நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை போன்று எல்லா பூங்காக்களும் டிஜிட்டல் சேவைத் துறையின் கீழ் செயல்படுவதில்லை. டைடல் பார்க், நியோ டைடல் பார்க் உள்ளிட்ட தொழில் நுட்ப பூங்காக்கள் தொழில் துறையிடம் தான் இருக்கிறது. எங்களிடம் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை. நிதி, திறன் மற்றும் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதை கேட்டால் கிடைக்கும் என்று பதிலளித்து பேசினார். அப்போது பாசிட்டிவாக பதில் சொல்லுங்கள், துறை சார்ந்த பிரச்சனைகளை முதல்வரிடம் பேசி தீர்வு காண வேண்டும் என என அமைச்சர் பழனிவேல் தியாகரஜனுக்கு சபாநாயகர் அப்ப்பாவு அறிவுறுத்தினார்.