
மாநில சுயாட்சியை உறுதி செய்ய; ஒன்றிய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து விரிவாக ஆராய உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கப்பட இருப்பதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமையும் அந்த குழுவில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அசோக் வர்தன் ரெட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பிரபல நாளிதழ் ஒன்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி குறித்து கட்டுரையாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘இந்திய நாட்டை ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்பது தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கை. அந்த முழக்கத்தை வென்றெடுக்க நீதிபதி இராஜமன்னார் குழுவை கலைஞர் அமைத்தார். அதே இலக்கில்தான் நீதியரசர் குரியன் ஜோசப்பைத் தலைவராகவும், அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்.
கலைஞர் குரல் எழுப்பிய காலத்தை விட இன்றைய காலம் மிகமிக மோசமான காலமாகும். இன்றைய ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியானது, மாநில அரசுகளை முடக்கப் பார்க்கிறது; மாநிலங்களின் மொழி, கலாசாரங்களை அழிக்கப் பார்க்கிறது; மாநிலங்களின் உரிமைகளைச் சிதைக்கப் பார்க்கிறது. மாநில அரசுகளை அதிகாரமற்றவைகளாக மாற்றி, அதனைச் ‘சட்டமியற்றும்’ தகுதி அற்றவைகளாகத் தகுதியைக் குறைத்து, ‘சொன்னதைச் செய்யும்’ கிளிப்பிள்ளைகளாக மாற்ற நினைக்கிறது. பல மாநில அரசுகள், ஒன்றிய அரசை நோக்கி பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கும் காட்சியைத்தான் பார்க்கிறோம். ஒரு மாநிலத்துக்கு நிதி உரிமையே ஆக்சிஜனாக இருக்கிறது. இதனைப் பறிப்பது, மூச்சற்ற நிலையை உருவாக்குவதே ஆகும். கடந்த பத்தாண்டுகளாக ஒத்திசைவுப்பட்டியல் அதிகாரங்கள் அனைத்தையும், ஒன்றிய அரசின் அதிகாரங்களாக மாற்றிக் கொண்டு விட்டார்கள். மாநிலப் பட்டியல் என்பதை மதிப்பதே இல்லை. அதில் இருக்கும் பொருள்கள் குறித்தும், அவர்களே சத்தமில்லாமல் சட்டமியற்றிக் கொள்கிறார்கள். தேசிய கல்வி கொள்கை ஏழை எளிய மக்களை கல்விச் சாலைகளில் இருந்து துரத்தும் கல்வி முறை. நீட் நமது ஏழை கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைப்பதாக இருக்கிறது. மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி மொழிக் கொள்கையாகவே மாற்றிவிடுவார்கள். இது இந்தி பேசாத மக்களை இந்திய நாட்டில் இரண்டாம் தர மக்களாக மாற்றும் சூழ்ச்சி.

மாநிலங்களுக்குப் பகிரப்படும் நிதியானது, தமிழ்நாடு போன்ற பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மாநிலங்களின் பங்களிப்பிற்கு ஈடாகத் தரப்படுவது இல்லை. நாம் பங்களிக்கக்கூடிய ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே நமக்கு அளிக்கப்படுகின்றது. இதன் உச்சகட்டமாகத் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கச் சதி செய்கிறார்கள். நமக்கு இடைஞ்சல் ஏற்படுத்தவும், எரிச்சல் ஏற்படுத்தவுமே ஆளுநர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆளுநர் செயலைச் சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும் அவர் திருந்தவில்லை; திருந்தமாட்டார். ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும். இந்தியா வலிமை பெற மாநிலங்கள் தாங்கள் விரும்பிய வண்ணம் ஆட்சி செலுத்தி வளர்ச்சியை அடைந்தாக வேண்டும். வளர்ச்சியான மாநிலங்களே, வலிமையான இந்தியாவை உருவாக்கும்!
நாம் எந்தப் பிரிவினை எண்ணத்தோடும் மாநில சுயாட்சிக் குழுவை அமைக்கவில்லை. ஒன்றிய அரசின் சார்பில் 1983-ஆம் ஆண்டில் சர்க்காரியா ஆணையம், 2007-ஆம் ஆண்டில் நீதிபதி பூஞ்சி ஆணையம் ஆகியவை அமைக்கப்பட்டது. மாநில சுயாட்சி என்பது ஒன்றிய ஆட்சியாளர்களாலும் பல்வேறு காலக்கட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட உன்னதமான கருத்தேயாகும். எனவே யாரும் தேவையற்ற பீதியைக் கிளப்பத் தேவையில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காணவே மாநில சுயாட்சி! மாநில சுயாட்சிக்காக அனைவரும் முழங்குவோம்! வளமும் வளர்ச்சியும் பெற்ற மாநிலங்களின் மூலமாக கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.