
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகித் குமார். 37 வயதாகும் இவர் ஐ.டி.நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரோகித் குமார், பிரியா யாதவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் தங்களது இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், பிரியாவுக்கு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. அதன்பிறகு ரோகித் குமாருக்கும் பிரியாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரோகித் குமார் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருந்த ரோகித் குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரோகித் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் ரோகித் குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் கடைசியாக பதிவு செய்த வீடியோ வாக்குமூலத்தைக் கைப்பற்றினர்.

அந்த வீடியோவில், நானும், பிரியாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். திருமணத்திற்கு பிறகு தனியாக குடித்தனம் செல்ல தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அவருக்கு ஆசிரியர் பணி கிடைத்ததில் இருந்தே என்னை டார்ச்சர் செய்ய ஆரம்பித்து விட்டார். என் மனைவி பிரியா, அவரின் அம்மா இருவரும் அனைத்து நகைகள், புடவைகளை தன்னிடமே வைத்துக் கொண்டனர். வீட்டையும், சொத்தையும் எழுதித் தராவிட்டால் என் மீதும், குடும்பத்தினர் மீதும் வரதட்சணை கொடுமை என்று போலீசில் புகார் கொடுப்பேன் என்று என் மனைவி மிரட்டுகிறார்.
இந்த வீடியோ உங்கள் கைகளில் கிடைக்கும் போது நான் உலகத்தை விட்டு போய்விடுவேன். ஆண்களுக்கு என்று ஒரு சட்டம் இருந்திருந்தால் ஒருவேளை நான் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டேன். என் மனைவி, அவரது குடும்பத்தினரின் சித்ரவதையை தாங்க முடியவில்லை. என் மரணத்திற்கு பின்நீதி கிடைக்கவில்லை என்றால் எனது அஸ்தியை சாக்கடையில் கரைத்து விடுங்கள் என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.