
நெல்லை பாளை வ.உ.சி மைதானம் அருகே தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பாளை, மேலப் பாளையம் கே.டி.சி.நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் பயின்று வருகின்றனர். மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டது. மதிய இடைவேலை விடும் சமயத்தில் வண்ணார்பேட்டைச் சேர்ந்த ஆசிரியை ரேவது 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பு முடியப் போகும் நேரத்தி 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அது சமயம் ஒரு மாணவர் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவரின் தோள்பட்டை கழுத்து முதுகுப் பகுதியில் மாறி மாறி வெட்ட வகுப்பு மாணவர்களிடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வெட்டுப்பட்ட மாணவன் ரத்தம் பீறிட கதறிக் கொண்டிருக்க, வகுப்பு முடிந்து வெளியே கிளப்பிய ஆசிரியை ரேவதி அலறல் சத்தம் கேட்டு பதற்றமாகத் திரும்பியவர் ஓடிப் போய் அரிவாளும் கையுமாக நின்ற மாணவனை தடுத்திருக்கிறார். அவர்மீது கோபத்தை காட்டிய மாணவன் ஆசிரியையும் இடது கையில் வெட்டியிருக்கிறான். இந்த சம்பவத்தால் பள்ளியே கலவரக் களேபரமானது.

இதையடுத்து பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் திரண்டு வந்து காயமடைந்த மாணவனை மீட்டு அந்தப் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மேலும் காயம்பட்ட ஆசிரியை ரேவதியும் அங்கே சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதேசமயம் மாணவரையும், ஆசிரியையும் வெட்டிய 13 வயதே ஆன 8ம் வகுப்பு மாணவன் கொஞ்சம் கூடப் பதற்றமில்லாமல் அருகிலுள்ள பாளை காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறான்.
இச்சம்பவத்தால் பாளையே பதட்டப்பட்டுக் கொண்டிருக்க சம்பவ இடம் வந்த மாநகர போலீஸ் கமிசனர் சந்தோஷ் ஹாதி மணி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பள்ளியிலிருந்த ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். அதில் வெட்டுப்பட்ட 8ம் வகுப்பு மாணவன் மேலப்பாளையத்தைச் சேர்ந்தவன். அவனை வெட்டிய சக மாணவன் பாளைய அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிரமத்தைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.

மேலப்பாளையம் மாணவனும் கிருஷ்ணாபுரம் மாணவனும் வெவ்வேறு சமூகம் சார்ந்தவர்கள் என்றாலும் வகுப்பில் இருவரும் ஒன்றாகவே அமர்ந்திருப்பார்களாம். கடந்த வாரம் நடந்த பரீட்சையின் போது கிருஷ்ணாபுரம் மாணவன் அவனிடம் பென்சில், அழிரப்பர் கேட்க அதற்கு மறுத்திருக்கிறான் மேலப்பாளையம் மாணவன். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் சண்டை போட்டு கொண்டிருக்கின்றனர். இதையறிந்த வகுப்பு ஆசிரியை அவர்கள் இருவரையும் தனித் தனியே அமர வைத்திருக்கிறார். ஆனாலும் இருவரும் ஒருவருக்கொருவர் முறைத்தபடி இருந்திருக்கிறார்கள்.
இதற்கிடைய கிருஷ்ணாபுரத்தின் அந்த மாணவன் சக மாணவர்களை மிரட்டியிருக்கிறான். மாலையில் வகுப்பு முடிந்து வெளியேறும் மாணவர்களிடம் கெத்தாக பேசியும் மிரட்டியுமிருக்கிறான். இப்படியே கடந்த வாரம் சென்றிருக்கிறது. ஏப் 15 அன்று பள்ளியின் கடைசி நாள் என்பதால் முன்னேற்பாடுடன் கிராமத்திலிருந்து கிளம்பும் போதே அவன் தன் நோட்டில் அரிவாளை மறைத்து வைத்து பையை பள்ளிக்கு எடுத்து வந்து நேற்றைக்கு அரிவாள் வெட்டுச் சம்பவத்தை நடத்தியிருக்கிறான். இதில் தடுக்க வந்த ஆசிரியை கூச்சலிட்டு ஒடிவந்த போது அவனது குறி ஆசிரியை மீது திரும்பியது. இல்லை என்றால் அவன் அந்த மாணவனின் கதையையே முடித்தி இருப்பான் என்கிறார்கள்.
கிருஷ்ணாபுரம் மாணவன் எப்போதுமே சக மாணவர்கள் தன்னைக் கண்டு ஒதுங்கி நிற்க வேண்டுமென்ற மப்பிலிருப்பவனாம். யாருக்கும் கட்டுப்படாத விடலை என்றும் சொல்லுகிறார்கள். போலீசாரின் விசாரணையில் கூட, தான், இன்ஸ்டாகிராம், யூடியுப் பார்த்துத்தான் இவற்றை தெரிந்து கொண்டேன். பளபளப்பான அரிவாளை மறைந்து வைத்துக் கொண்டு வந்ததாகத் தெரிவித்திருக்கிறான்.

இந்த சம்பவத்திற்கு பென்சில் பிரச்சினை ஒரு காரணமல்ல என்று சொல்லப்பட்டாலும் வெட்டுப்பட்ட மாணவனின் பெற்றோரோ பென்சில் விவகாரத்தை நம்ப முடியவில்லை. அவன் வீட்டிலிருந்து கிளம்புகிற போதே திட்டமிட்டு ஆயுதத்தோடு வருமளவுக்கு பிரச்சினை முற்றியுள்ளது. வேறு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. அதனை போலீசார் தீவிரமாக விசாரிக்கவேண்டும்.
இது குறித்து நாம் உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசும்போது, “அந்த கிருஷ்ணாபுரம் மாணவனோ தான் இன்ஸ்டா பதிவு யூடிப் பார்த்துத் தான் இப்படிச் செய்தேன் என்று போலீசாரே அதிரும்படி விசாரணையில் உள்ளதைக் கொட்டியிருக்கிறான். இதற்கு அடிப்படையே ஒரு குறிப்பிட்ட தென் மாவட்ட ரவுடிகள் குரூப் தங்களுக்குப் பிறகு தங்களின் ஹீரோயிசத்தை அடுத்த இளந்தலைமுறையினருக்குக் கடத்துகிறது, தயார்படுத்துகிறது. அதன் வெளிப்பாடுதான் மாணவனின் இந்தச் சம்பவம். தான் எத்தகைய சம்பவத்தில் ஈடுபடுகிறோம் என்பதைத் தெரியாமலே அவன் இதற்கு ஆட்பட்டிருக்கிறான். காரணம் மற்றவர்கள் மத்தியில் தான் ஹீரோவாகணும், அவர்கள் மிரளும்படியாக இருக்க வேண்டும் என்ற ஹீரோ கெத்தை வெளிப்படுத்தியே அவனைச் சலவை செய்ய அவர்களும் அடிமையாகிறார்கள். அதற்கு பல்வேறு சம்பவங்களிருக்கின்றன.

முளைத்து மூன்று இலைகள் விடவில்லை 13 வயதேயான மாணவன், அரிவாளை வைத்து வெட்டுகிறான். வெட்டிய பின்பு தேர்ந்த குற்றவாளி போன்று காவல் நிலையம் சென்று பாதுகாப்பாக சரணடைகிறான். இது யதேச்சையாக நடக்கக் கூடிய சாத்தியமான சம்பவமா?. இல்லை இந்த அளவுக்கு அவனுக்கு யார் வகுப்பெடுத்தது. தேர்ந்த கிரிமினலின் டைரக்டஷன் இன்றி இப்படி செய்ய வாய்ப்பே இல்லை. அந்தளவுக்கு இளம் சிறார்கள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்.
அண்மையில் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் வந்த மாணவன் வெட்டபட்டதில், நீதிமன்றம் அருகில் செட்டிகுளம் கவுன்சிலர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட பயங்கரம், நாங்குநேரி மாணவனுக்கு விழுந்த அரிவாள் வெட்டுக்கள், கே.டி.சி. நகரின் முன்றடைப்பின் முத்துமனோகரின் ஆதரவாளரான தீபக் பாண்டியனை வெட்டி கொல்லப்பட்ட சம்பவங்களில் எல்லாம் இளம் சிறார்கள் பயன்படுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த வருடம் நடந்த கே.டி.சி. நகர் சம்பவத்தில் நவீன், லெப்ட் முருகன் உள்ளிட்ட நெல்லையின் தென்பக்கப் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் கைது செய்யப்பட்டவர்கள். இதில் ரவுடி நவீன் கடந்த வருடமே தீபக் பாண்டியனின் கொலைக்குச் சில நாட்களுக்கு முன்பாக, நாங்கள் தான் தென் மாவட்டத்தின் முதல் தர ரவுடி. எங்களை விட்டால் வேறு யாருமில்லை என்று தனக்குப் பட்டாப் போட்டது மாதிரி தெனாவெட்டாகவே நெல்லை எஸ்.பி.க்கு அனுப்பிய ஆடியோவில் சவால் விட்டிருக்கிறான்.

இவர்களின் தரப்புகளே அண்மையில் மேலப்பாளையம் செய்யது தமீம், நெல்லை டவுண் முத்தவல்லி ஜாகிர் உசேன் இருவரின் கொலைச் சம்பவத்தில் தொழில் முறைக் கில்லர்களாகப் பயன்படுத்தப்பட்டு வழக்கிலிருந்து தப்பியிருக்கிறார்கள். நவீன் மீது 19 கொலை வழக்குகள், அவன் கூட்டாளி லெப்ட் முருகன் மீதும் பல வழக்குகல் இருக்க, இவர்கள் தமிழகம் முழுவதிலும் தொழில் முறைக் கூலிக் கொலையாளியாகவும் செயல்படுகிறார்கள். கடந்த வருடம் சென்னையில் நடந்த பி.எஸ்.பி. தலைவர் ஆர்ம்ஸ்டாங் கொலையில் கூட நவீன், கூட்டாளியாகச் செயல்பட்டு கைதானவன்.
தாங்கள் சார்ந்த சமூகத்தின் காட்ஃபாதர்களாக தங்களைக் காட்டிக் கொள்கிற இந்த கேங்க் நாம், கட்டி வை என்றால் வெட்டி வருகிற வழியில் வந்தவர்கள், ஆண்ட பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்றும் பல்வேறு விதமாக இள ரத்தங்களைச் சூடேற்றுகிற ஆடியோ, வீடியோ போன்ற பதிவுகளை அவர்கள் தரப்பின் இன்ஸ்டா, மற்றும் சமூக வலை தளங்களில் பரப்பி வருகின்றனர். இவைகளை ஃபாலோ செய்கிற மாணவன் போன்ற அந்தப் பிரிவு இளசுகள், ஒரு விதமான இறுமாப்பில் மயங்கி அரிவாளைப் பிடித்தால் பலர் நமக்கு பயப்படுவர், அடிமையாவர் என்று அவர்கள் தங்களையும் அறியாமல் இந்த வலையில் சிக்கி விடுகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் தற்போது பாளை பள்ளி சம்பவம் போலீஸ் இதை திறமையாகக் ஹோண்டில் செய்தால் உண்மை நிலவரம் வெளியே வரும்” என்றார்.

“மேலப்பாளையம் முன்னமாதிரியில்ல. அமைதிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அரசின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. இப்ப மாணவன் சம்பவத்தில் பென்சில் விவகாரம் ஒரு பிரிச்சினை இல்லை. பின்னால வேறு விஷயமிருக்கு அண்மையில மேலப்பாளையத்தில் நடந்த செய்யது தமீம் கொலை டவுண்ல முத்தவல்லி ஜாகீர் உசேன் கொலை ரெண்டுலயும் முறையான விசாரணை வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவது அவுகளுக்குப் பிடிக்கல. மாணவன் வெட்டப்பட்ட சம்பவத்தின் பின்னணியையும் தீவிரமா விசாரிச்சு அதுல மூளையாச் செயல்பட்டவுகள அடையாளம் கண்டு போலீஸ் கைது பண்ணனும். இந்தக் கோரிக்கையத்தான் நாங்க நெல்லை காவல்துறை அதிகாரிக கிட்ட வைச்சிறுக்கோம்” என்று நம்மிடம் சொன்னார் மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவரான ரசூல்.
சி.பி.எம்.மின் நெல்லை மாவட்ட செயலாளரான ஸ்ரீராம், “தென்மாவட்டத்தில் நடந்த கொலைகளில் ஒன்றிரண்டு தான் தனிப்பகை, நிலம் சார்ந்தவைகள் மற்றவைகள் அனைத்தும் சாதி மோதல்களின் விளைவே. இதில் குறிப்பாக கடந்த வருடம் நடந்த கொலைகளில் 48 இளம் சிறார்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று நெல்லை மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசனே பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

சமூக வலை தளங்களில் இன்ஸ்டாவில் பதிவாகிற பரப்பப்படுகிற ஒரு தரப்புகளின் சூடேற்றுகிற பதிவுகள் பலமாக பரப்பப்படுவதன் பின்னணியே இப்போதைய இளஞ்சிறார்கள் அடிமையாகவதற்கு காரணம். இந்த வழியில் தான் தற்போது இளம் தலைமுறையினர் உருவாக்கப்படுகிறார்கள். இது போன்றவைகளை நீதிபதி, சந்துரு கமிட்டியே விரிவான அறிக்கையை அரசுக்கு கொடுத்திருக்கிறது. அதனை அமல்படுத்த வேண்டும். அது தான் தீர்வு” என்றார்.
பாடப்புத்தகம் தூக்க வேண்டிய கைகள் அரிவாட்களை ஓங்குவது ஆபத்தின் அறிகுறி. அரசு இரும்புக்கரத்தை இறுக்க வேண்டிய தருணமிது எனறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைகின்றனர்.