
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் இறந்ததுமே, அக்கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தன் நியமிக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனந்தன் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்தே, அவருக்கும் பொற்கொடிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஆம்ஸ்ட்ராங்கால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை தற்போதைய தலைவர் ஆனந்தன் காழ்ப்புணர்ச்சியுடன் நீக்கி இருப்பதாக பொற்கொடி குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதன் காரணமாக பொற்கொடி கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில், ஆனந்தனின் மருமகனான வில்லியம்ஸ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வில்லியம்ஸ். இவர் ஆனந்தனின் மகளான அஸ்வினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு ஆனந்தன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில், மனம் மாறிய அஸ்வினி தனது கணவர் வில்லியம்ஸை விட்டுப்பிரிந்து ஆனந்தன் வீட்டுக்கு சென்றுவிட்டார். அந்த நாளில் இருந்து வில்லியம்ஸை குறிவைக்க தொடங்கிய ஆனந்தன் தரப்பு, அவரை கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், "ஒரு ரெண்டு மாசமா என் உயிரை பாதுகாக்குறதுக்காக ஊர் ஊரா போய்ட்டு இருக்கேன். ஏற்கனவே என்ன அம்பத்தூர்ல கொலை பண்ண முயற்சி நடந்தது. இதுக்கெல்லாம் காரணம் என்னோட மாமனார் ஆனந்தன். அவரோட மனைவி கவிதா. அவரோட மகள் அஸ்வினி. இறந்துபோன ஆம்ஸ்ட்ராங்கோட சகோதரர் தான். இவங்க எல்லாரும் சேர்ந்து கூலிப்படையை ஏவிவிட்டு என்னை கொலை செய்ய பாக்குறாங்க. இது சம்மந்தமா ஆம்ஸ்ட்ராங் கிட்ட பேச எவ்வளவோ முயற்சி பண்ணாங்க. ஆனா.. அவரு விசாரிச்சு என்மேல எந்த தப்பும் இல்லன்னு எனக்கு சப்போர்ட் பண்ணாரு. அதுனால ஆனந்தனுக்கு ஆம்ஸ்ட்ராங் மேல காழ்ப்புணர்ச்சி இருக்கு" என பகிரங்க பேசியிருக்கிறார்.
தற்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருக்கும் ஆனந்தன் குறித்து, அவரது மருமகன் வெளியிட்ட வீடியோ காட்டுத்தீ போல பரவி வருகிறது.