Skip to main content

 பாண்டியன் கோட்டையில் பழமையான பாசிமணி, இரும்பு கண்டெடுப்பு!

Published on 10/04/2025 | Edited on 10/04/2025

 

Ancient bas-relief and iron found in Pandian Fort!

காளையார் கோவிலில் புறநானூற்றுச்  சிறப்புமிக்க பாண்டியன் கோட்டை மேட்டுப்பகுதியில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா, செயலர் இரா.நரசிம்மன், கள ஆய்வாளர் கா. சரவணன் ஆகியோர் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் பழமையான பளிங்கிக் கல்லாலான பாசிமணி மற்றும் செம்பினால் ஆன கைப்பிடியோடு இரும்பால் செய்யப்பட்டுள்ள பொருள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர் புலவர்  கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது,  காளையார் கோவில் நகரின் மையப்பகுதியில்  புறநானூற்றில் வேங்கை மார்பன் ஆட்சி செய்த கோட்டையை பாண்டியன்  உக்கிர பெருவழுதி கைப்பற்றிய செய்தி  பாடப்பட்டுள்ளது, இதற்கு சான்றாக 37 ஏக்கர் பரப்பளவில் இன்று  பழமையான மண்மேடாக வட்ட வடிவில் காட்சியளிக்கிறது பாண்டியன் கோட்டை. இதைச் சுற்றி   அகழி மற்றும் நடுப்பகுதியில் நீராவி குளம் ஆகியன அமைந்துள்ளன. மேலும் கிழக்குப் பகுதியில் கோட்டை முனீஸ்வரர் கோவில் தெற்கு பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவில் ஆகியன இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளன. 

நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் இதைச் சுற்றியுள்ள நகர்ப் பகுதியில் மழை நீர் வடியாததால் நடுவில் உள்ள நீராவிக் குளத்தின் இரண்டு பக்கங்களிலும் உள்ளாட்சி அமைப்பில் இருந்து மழை நீர் வடியும் வகையில் வாய்க்கால் தோண்டப்பட்டது. அது முதல் இங்கு பழமையான பொருள்கள் தொடர்ச்சியாக சிவகங்கை தொல்நடைக் குழுவினரின் மேற்பரப்பு கள ஆய்வில் கிடைத்து வருகின்றன.

பழமையான பொருள்கள்;

பழமையான சங்க கால செங்கல் எச்சங்கள், மேற்கூரை ஓட்டு எச்சங்கள், மேற்கூரை ஓட்டு எச்சங்களில் துளையிடப்பட்ட ஓடுகள், வட்டச் சில்லுகள் எடைக் கற்கள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், எலும்பினால் செய்யப்பட்ட கருவி முனைகள் ஆகியவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறியீடு மற்றும் தமிழி எழுத்து பானையோடுகள்;

குறியீடுகள் காலத்தால் எழுத்துக்களுக்கு முற்பட்டவை என்பது பொதுக்கருத்து. அவ்வாறான குறியீடுகள் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன. தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் மோசிதபன்,ன் கூட்டம் என எழுதப்பட்ட  பானையோடுகள் கிடைத்துள்ளன.

முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு;

மேற்பரப்பு கள ஆய்வில் தொடர்ச்சியாக பழமையான பொருள்கள் கிடைத்து வருவதால் சிவகங்கை தொல்நடைக் குழு இவ்விடத்தில் அகழாய்வு செய்ய தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர், அதன் அடிப்படையில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு செய்தனர், பின்னர் முன்னுரிமைஅடிப்படையில் அகழாய்வு நடத்தப்படும் எனும் தகவல் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு கடிதம் வழி தெரிவித்துள்ளனர்.

Ancient bas-relief and iron found in Pandian Fort!

பாசி மணி, செம்பு மற்றும் இரும்பாலான பொருள்;

பளிங்கிக் கல்லாலான கண்ணாடியைப் போன்ற பாசி மணி ஒன்று தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது, இம்மணியின் நடுவில் கோர்க்க  நேர்த்தியாக துளையிடப்பட்டு வட்ட வடிவில் தட்டையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

செம்பினால் கைப்பிடி செய்யப்பட்டு உள்ளே இரும்பு நுழைக்கப்பட்ட வேலைப்பாடுடைய பொருள் ஒன்றும் கிடைத்துள்ளது, இது சிறிய வடிவிலான இரும்பால் செய்யப்பட்ட கத்தி அல்லது குறுவாள் என ஏதாவது ஒரு பொருளாக இருக்கலாம் ஆனாலும் இரும்பும் செம்பும் பன்னெடுங்காலமாக நமது பயன்பாட்டில் இருப்பதை இவ்வாறான தொன்மையான பொருள்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன என்று அவர் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்