
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மாசித் மிட்டா பகுதியை சேர்ந்தவர் 26 வயதான யாஸ்மின் பானு. புத்தலப்பட்டை சேர்ந்தவர் சாய் தேஜ். இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். ஆனால், சாய் தேஜ் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், யாஸ்மின் பானு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் பெண்ணின் வீட்டில் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இருப்பினும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த சாய் தேஜ் மற்றும் யாஸ்மின் பானு இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறிக் கடந்த 9 ஆம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு பாதுகாப்பு கேட்டு திருப்பதி கிராமப்புற காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அதன்பிறகு பெண் வீட்டாரிடம் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார் இருவரும் மேஜர் என்பதால் யாஸ்மினை அவரது காதல் கணவர் சாய் தேஜுடன் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு யாஸ்மினை தொடர்பு கொண்ட பெண் வீட்டார், அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லை, மருத்துவமனையில் வைத்திருக்கிறோம். அவரை பார்க்க வருமாறு கூறியுள்ளனர். அதன் பேரில் சாய் தேஜுவும், யாஸ்மின் பானுவும் சித்தூரில் உள்ள காந்திசிலை சந்திப்புக்கு வந்தபோது, அங்கு வந்த பெண்ணின் உறவினர்கள் யாஸ்மின் பானுவை மட்டும் காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சாய் தேஜ் மனைவி யாஸ்மினுக்கு போன் செய்து பார்த்த போது யாஸ்மின் அழைப்பை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த நாள் யாஸ்மின் பானு அவரது பெற்றோர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது பெற்றோர் யாஸ்மின் பானு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்திருக்கின்றனர். ஆனால், கணவர் சாய் தேஜ், யாஸ்மின் பானுவை ஆணவக் கொலை செய்துவிட்டு அவரது பெற்றோர் நாடகமாடுகின்றனர் என்று குற்றம் சாட்டி திருப்பதி கிராமபுர காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பெண்ணின் தாயாரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் தலைமறைவாக உள்ள தந்தை மற்றும் சில குடும்ப உறுபினர்களை தேடி வருகின்றனர்.