Skip to main content

ரோட் ஷோ நடத்தி டேபிள் சேர் போட்டதைப் பெரிய சாதனையாகப் பேசுகிறார்கள்... முரளி அப்பாஸ் பதிலடி... 

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

ssss

 

நீட் தேர்வு விவகாரம், விவசாயிகளுக்கான மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு, ஆன்லைன் கல்வி முறைப்படுத்துதல், கரோனா முறைகேடுகள், எட்டு வழிச்சாலை விவகாரம், மீனவர்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பின்மை, ஜி.எஸ்.டி பங்குகள் பெறுவதில் உள்ள தாமதம், டாஸ்மாக் விவகாரம், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என பத்து கேள்விகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டு, இதுபோன்ற மக்கள் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல், மூன்றே நாட்களில் கண்துடைப்பாக சட்டமன்றத் தொடரை நடத்தி முடிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

 

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், கரோனாவுக்கு பயந்து பிக்பாஸ் போல வீட்டுக்குள் இருந்தபடி, அரசை விமர்சனம் செய்வதாகக் குற்றம் சாட்டினார். மார்ச் மாதம் கோவிட் வந்ததில் இருந்து மக்களைத் தினந்தோறும் சந்தித்து வருகிறோம். களப்பணியில் இருக்கிறோம். பிக்பாஸ் -3 நிகழ்ச்சியின் முன்னோட்டமாக கமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார் என்றார். 

 

கமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார். கரோனா வந்ததில் இருந்து நாங்கள் களத்தில் இருக்கிறோம் என்று ஜெயக்குமார் பதில் அளித்திருக்கிறாரே என்று மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் கேட்டோம். 

 

அதற்கு அவர், தேவையில்லாமல் வெளியே வராதீர்கள் என்று சொல்லிவிட்டு வெளியேவருவது தியாகம் என்று சொல்கிறார்களே அதுவே முட்டாள்தனம் இல்லையா? ஒரு அரசு நிர்வாகத்தில் இருக்கும் நீங்கள் வெளியே வந்துதான் ஆகவேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக கமலின் பொறுப்பு, நிர்வாக ரீதியாகச் சரியாக நடக்கிறதா என்று கேள்வி கேட்கலாம், மக்களுக்கு தேவையானவற்றை செய்துகொடுக்க வேண்டும். 'நாமே தீர்வு' என்று நாங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அவர் அச்சப்படவில்லை என்பதற்கு உதாரணம்தான் நிதியுதவி கொடுத்துவிட்டுப் போனது. இவர்கள் இன்று பார்க்கும் பிக்பாஸ் ப்ரமோ வெளியே வராமலேயே எடுத்ததா? அவருக்குப் பயம் என்பதே கிடையாது. மற்றவர்களுக்கு முன் உதாரணமாக தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று எங்களுக்குச் சொல்லியிருக்கிறார். 

 

தம்பி ஸ்னேகன், ‘ஒரு ஊரிலிருந்து 100 பேர் சேரவேண்டும் என்கிறார்கள்’ என்றார். அதற்கு “ஸ்னேகன், எனக்கு நிறைய ஸ்னேகன்கள் தேவைப்படுகிறார்கள் அதற்காக நீங்கள் இப்படிப் போகக்கூடாது. ஒருவேளை போவதென்றால் உங்களைப்போல ஒரு ஸ்னேகனை எனக்குத் தயார் பண்ணி கொடுத்துவிட்டுப் போங்கள்” என்று எங்களுக்கே அன்பாகக் கட்டளையிட்டிருக்கிறார். அவர் பாதுகாப்பாகவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கச் சொன்னரே தவிர, வரவேண்டியவைகளுக்கு வராமல் இருந்ததில்லை. இவர்களைப் போல் தங்களுக்கு ஒரு பாதுகாப்பு வைத்துக்கொண்டு ரோட் ஷோ நடத்தி ஏமாற்றும் வேலையை எல்லாரும் செய்ய மாட்டார்கள். 

 

ம.நீ.ம. கேட்ட ஒரு பத்து கேள்விகளுக்கு அவர்களிடம் ஒழுங்கான பதில் இல்லை. இன்று எங்கள் அறிக்கைக்கு தி.மு.க, அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் பதில் சொல்லியுள்ளது. ஆளும்கட்சியைப் பார்த்து கேட்ட கேள்விக்கு இவர்கள் எல்லாம் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் எப்படி வந்தது என்றால் நாம் கேட்ட கேள்வியில் நியாயம் இருந்தது. 

 

Ad

 

டெல்லியிலேயே 10 நாட்கள் கூட்டம் நடத்துகிறார்கள். இவர்கள் ஏன் மூன்று நாட்கள் மட்டுமே சட்டசபைக் கூட்டத்தை நடத்துகிறார்கள். முதல் நாள் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது. அது எப்போதும் நடந்து வருவது. மற்றொருநாள், நீட் விவகாரத்தில் நீங்கள்தான் குற்றவாளி, நீங்கள்தான் குற்றவாளி என இரண்டுபேரும் மாறிமாறிச் சொல்லிக்கொண்டார்கள் அவ்வளவுதான். இதைத் தவிர்த்து எந்தப் பிரச்சனையும் அவர்கள் பெரிதாகப் பேசவில்லை. வெறும் சலுகைகள் அறிவிப்பு, கண்துடைப்பு மட்டும் செய்தனர். இன்றும் தினசரி 6,000 நபர்களுக்கு தொற்று உறுதியாகிக்கொண்டே வருகிறது. அதைக் கட்டுப்படுத்தக்கூடிய எந்த ஆலோசனையும் இல்லை.

 

ddd

 

இங்கு பத்து கேள்வி என்பது விஷயமே இல்லை. இத்தனை பிரச்சனைகளை வைத்துக்கொண்டு மூன்று நாட்கள் மட்டும் கூட்டுகிறீர்களே என்பதுதான் விஷயம். அடுத்தது பருவமழை காலம் வந்துவிட்டது. இப்போதெல்லாம் அதிக வெள்ளம் வருகிறது அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்திருக்கிறீர்கள். 

 

கலைவாணர் அரங்கத்தில் 234 பேருக்கு கார்ப்பட் விரித்து டேபிள் சேர் போட்டது பெரிய சாதனையாகப் பேசுகிறார்களேயொழிய ஒருவாரம் பேச உங்களுக்கு நேரமில்லையா? அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் சபாநாயகர் முடிவு எடுக்கும்போது அதிக நாட்கள் கூட்டச்சொல்லி போராடியிருக்கலாமே இவர்கள். 

 

சட்டசபைக்கு வெளியே நீங்கள்தான் காரணம் எனக் கடுமையாகப் பேசும் தி.மு.க., சட்டசபைக்குள் நீங்கள்தான் காரணம் என முதலமைச்சர் பேசும்போது எந்த அளவிற்குச் சமாளித்தார்கள். காங்கிரஸ் இராமசாமி, ‘நாங்கள் இவ்வளவு கோரிக்கைகள் கொடுத்திருக்கிறோம் சட்டசபை இரண்டு நாட்கள்தான் நடக்கிறது’ என இப்போது கவலைப்படுகிறார். சபாநாயகர் அலுவல் ஆய்வுக் கூட்டம் கூட்டும்போது அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களையும் வைத்துத்தானே கூட்டுகிறார் அப்போதே எங்களுக்கு அதிகநாட்கள் வேண்டுமென்று கேட்க வேண்டியதுதானே. 

 

Nakkheeran

 

சந்தோஷப்படக்கூடிய ஒரு விஷயம், சட்டசபைக்குள் ஒழுங்காகக் கேள்வி- பதில் நேரம் நடக்கவில்லை என்றாலும் வெளியில் இருந்து கேட்ட கேள்விகளுக்கு மூன்று கட்சிகளும் பதில் சொல்லியிருக்கிறார்கள். சப்பை பதிலோ இல்லை சமாளிப்பு பதிலோ இனிமேல் இப்படித்தான் வரிசை கட்டி வந்து பதில் சொல்லி ஆகணும் என்றார்.