Skip to main content

பணத்தாள்களில் பதிந்த 'உலக பாரம்பரியச் சின்னங்கள்'

Published on 19/04/2025 | Edited on 19/04/2025
nn

யுனெஸ்கோவின் 1972-ம் ஆண்டு உலக பாரம்பரிய கொள்கைப்படி, வரலாறு, கலாச்சார, இயற்கை முக்கியத்துவம் கொண்ட நினைவுச் சின்னங்களை அதன் உலக பாரம்பரிய குழுமம் தேர்வு செய்து, உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கும். இந்தியாவில் தற்போது 42 உலக பாரம்பரியச் சின்னங்கள் உள்ளன.

 

nn



ரூபாய் நோட்டில் உலக பாரம்பரியச் சின்னங்கள்

ரூபாய் நோட்டுகள், இந்திய விடுதலைக்குப் பின், அசோக சின்னத்துடன் வெளியிடப்பட்டன. 1969-ல் மகாத்மா காந்தியின் நூற்றாண்டையொட்டி, அவர் உருவத்துடன் 100 ரூபாய் நோட்டுகள் வெளிவந்தன. 1991-ல் பொருளாதார சீர்திருத்தங்களின் போது, ரூபாய் நோட்டுகளில் சிறப்பு சின்னங்கள் சேர்க்கப்பட்டன. 2016க்கு பின் வெளிவந்த பணத்தாள்களில் உலக பாரம்பரியச் சின்னங்கள் 10, 20, 50, 100, 200, 500 ஆகிய நோட்டுகளில் அச்சிடப்பட்டுள்ளன

nn

.

இதுபற்றி ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர், க.வளர்மதி கூறியதாவது,

10 ரூபாய் – சூரியக் கோயில் தேர்ச் சக்கரம்

nn



ஜனவரி 2018-ல் புழக்கத்துக்கு வந்த இதில், ஒடிசா, கோனார்க், சூரியக்கோயில் தேர்ச் சக்கரம் உள்ளது. சூரியக்கோயில் 1984-ல் உலக பாரம்பரிய சின்னமானது. கங்க வம்சத்தின் முதலாம் நரசிம்மதேவனால் கி.பி.13-ம் நூற்றாண்டில் சூரியக் கடவுளுக்காக வங்காளக் கரையோரம் கட்டப்பட்டது. ஒரு பெரிய தேர் வடிவில், 24 சக்கரங்கள், ஏழு குதிரைகளுடன் கலிங்க கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. கல் சக்கரங்கள், நேரத்தை துல்லியமாக கணக்கிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஏழு குதிரைகள் ஏழு நாட்களைக் குறிக்கின்றன. கோயில் சுவர்களில் கடவுள், தேவதை, விலங்கு, அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கும் சிற்பங்கள் உள்ளன. கருப்பு கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளதால், ஒரு இருண்ட, மர்மமான தோற்றத்தை கோயிலுக்கு கொடுக்கிறது. கருப்பு நிறத்தில் காட்சியளிப்பதால் இது, 'கருப்பு பகோடா' எனப்படுகிறது. இது ஐரோப்பிய கடல் மாலுமிகளுக்கு ஒரு முக்கிய அடையாளச் சின்னமாக முன்பு இருந்தது.

20 ரூபாய் – எல்லோரா கைலாசநாதர் கோயில்

nn



ஜனவரி 2019-ல் புழக்கத்துக்கு வந்த இதில், மகாராஷ்டிரா மாநிலம், எல்லோரா கைலாசநாதர் கோயில் அச்சிடப்பட்டுள்ளது. எல்லோரா குகைகள் உலக பாரம்பரிய சின்னமாக 1983-ல் அங்கீகரிக்கப்பட்டன. இவை கி.பி.6-11-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. இங்குள்ள  34 குகைகளில், 12 பௌத்தம், 17 இந்து, 5 ஜைன குகைகள் உள்ளன. இவை சரணந்திரிக் குன்றுகளில் அடர் சாம்பல், கருப்பு நிற பசால்ட் வகை பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டவை. ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட, கைலாசநாதர் கோயில் இந்திய கலை மற்றும் கட்டடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குகைகள் இரு கி.மீ. பரப்பளவில் பரவியுள்ளது. சில குகைகள் பல தளங்களாக குடையப்பட்டிருக்கும்.

50 ரூபாய் - ஹம்பி கல் ரதம்

heritage



ஆகஸ்ட் 2017-ல் புழக்கத்துக்கு வந்த இதில், கர்நாடக மாநிலம், விஜயநகர மாவட்டம், துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஹம்பி கல் ரதம் அச்சடிக்கப்பட்டுள்ளது.  ஹம்பி நினைவுச் சின்னங்கள் உலக பாரம்பரிய சின்னமாக 1986-ல் அங்கீகரிக்கப்பட்டன. கி.பி.1336-ல் நிறுவப்பட்ட விஜயநகரப் பேரரசு கி.பி.1565-ல் தக்காண சுல்தான்களால் தோற்கடிக்கப்பட்டு, ஹம்பியின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. இங்கு விஜய விட்டலா கோயில், விருபாக்ஷா கோயில், ஹசாரா ராம கோயில், லோட்டஸ் மஹால் போன்றவை உள்ளன. இந்த ரதம் விட்டலா கோயிலின் வளாகத்தில் அமைந்துள்ளது. ஒரே கல்லில், தேரின் வடிவில் மிகவும் நுணுக்கமான முறையில் இது செதுக்கப்பட்டுள்ளது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரமிக்க வைக்கும் கட்டடக்கலையாகவும், கைவினைஞர்களின் கலைத்திறமையை எடுத்துக்காட்டுவதாகவும் இது அமைந்துள்ளது.

100 ரூபாய் - ராணி கி வாவ் குளம்

heritage



ஜூலை 2018-ல் புழக்கத்துக்கு வந்த இதில் குஜராத்தில் பதான் நகரில், சரஸ்வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள 'ராணி கி வாவ்' குளம் அச்சிடப்பட்டுள்ளது. 2014-ல் இது உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. கி.பி.11-ம் நூற்றாண்டில் சோலங்கி வம்சத்தைச் சேர்ந்த முதலாம் பீமதேவனின் நினைவாக, அவர் மனைவி ராணி உதயமதியால், மார்-குர்ஜாரா கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இது, ஏழு நிலைகளைக் கொண்ட ஒரு பெரிய படிக்கிணறாகும். பூமிக்கடியில் கட்டப்பட்ட நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு அற்புதமான கோயில். தரை மட்டத்திலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தலைகீழ் கோயில் எனப்படுகிறது. இதன் படிகள் பல நிலைகளாக இறங்கிச் செல்கின்றன. ஒவ்வொரு நிலையும் பெரும் அரண்மனை போல தூண்களும், மாடிகளும், உப்பரிகைகளுமாகக் கட்டப்பட்டுள்ளன. ஒரு கிணறு போல ஆழமாக கட்டப்பட்டிருந்தாலும், ஒரு கோயில் போன்ற கலைநயம், நுணுக்கமான சிற்ப வேலைபாடுகளுடனும் கட்டப்பட்டுள்ளது. இதன் சுவர்களில், விஷ்ணுவின் 10 அவதாரங்கள், தேவதைகள் என மிக நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

200 ரூபாய் - சாஞ்சி ஸ்தூபி

heritage



ஆகஸ்ட் 2017-ல் புழக்கத்துக்கு வந்த இதில் மத்திய பிரதேசம், போபால் நகரத்தில் இருந்து 46 கி.மீ. தொலைவிலுள்ள சாஞ்சி ஸ்தூபி அச்சிடப்பட்டுள்ளது. இது உலக பாரம்பரியச் சின்னமாக 1989-ல் அங்கீகரிக்கப்பட்டது. மௌரியப் பேரரசர் அசோகரால் கி.மு. 3-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, புத்த மதத்தின் முக்கியமான சின்னங்களில் ஒன்று. செங்கல், கற்களால் கட்டப்பட்ட அரைக்கோள வடிவ குவிமாடம். இதனைச் சுற்றி உள்ள நான்கு தோரண வாயில்களில் புத்தரின் வாழ்க்கை மற்றும் ஜாதக கதைகளின் சிற்பங்கள் உள்ளன. இவை புத்த மதத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. சாஞ்சி ஸ்தூபியில் புத்தரின் உருவம் எந்த சிற்பத்திலும் இடம்பெறாமல் அவரது பாதங்கள், போதிமரம், தர்மசக்கரம் போன்றவை மட்டும் இடம்பெற்றுள்ளன. இவை புத்தரின் உருவத்தை வணங்குவதை விட, அவரது போதனைகளையும் தத்துவங்களையும் பின்பற்றுவதற்கு முக்கியத்துவம் அளிப்பதை காட்டுகிறது.

500 ரூபாய் – டில்லி செங்கோட்டை

heritage



இது நவம்பர் 2016-ல் புழக்கத்துக்கு வந்தது. டில்லி செங்கோட்டை, 2007-ல் உலக பாரம்பரிய சின்னமானது. டெல்லியில், யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள இது சிவப்பு மணற்கற்களால் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கி.பி.17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.  லாகோரி கேட், டெல்லி கேட் என இரு முக்கிய வாயில்களை கொண்ட இதில், திவான்-இ-ஆம், திவான்-இ-காஸ், ரங் மஹால் ஆகிய முக்கிய கட்டடங்கள் உள்ளன. 254 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இதன் சுவர்கள் சுமார் 2.4 கி.மீ. நீளம் கொண்டவை. இதில் பல அருங்காட்சியகங்கள் உள்ளன. முதலில் இது ஆசீர்வதிக்கப்பட்ட கோட்டை என்ற பொருளில் கிலா-இ-முபாரக் எனப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம், இறையாண்மையின் சின்னமாக கருதப்படும் இங்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று பிரதமர் தேசிய கொடி ஏற்றுவார்.

இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள இத்தகைய உலக பாரம்பரியச் சின்னங்கள், நாட்டின் பண்பாடு மற்றும் வரலாற்றுச் சிறப்பை பிரதிபலிப்பதாக உள்ளன. நம் நாட்டின் பாரம்பரியத்தை எதிர்கால சந்ததிக்கு எடுத்துச் செல்வதாகவும், நோட்டுகளின் வடிவமைப்பினை அழகுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.