Skip to main content

OPS-EPS அணியை சரிப்படுத்தி தேர்தல் வியூகங்களை வகுக்கும் 'SMS'!

Published on 11/09/2020 | Edited on 11/09/2020
dddd

 

இ.பி.எஸ். அணி - ஓ.பி.எஸ். அணி என்று வெளிப்படையாக சர்ச்சை ஏற்பட்டிருக்கிற சூழலில் இரண்டையும் சரிப்படுத்தி, தேர்தல் வியூகங்களை வகுக்கும் வேலையை எஸ்.எம்.எஸ். என்ற டீம்தான் கவனிக்கிறது. எடப்பாடியாக இருந்தாலும், ஓ.பி.எஸ்.ஸாக இருந்தாலும் மத்த அமைச்சர்களாக இருந்தாலும், இந்த எஸ்.எம்.எஸ். அணிக்கு தெரியாமல் எதையும் பேசக் கூடாது என்றும், எந்த செயலிலும் தனியாக ஈடுபடக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

 

admk

 

 

அது என்ன எஸ்.எம்.எஸ். அணி? என அதிமுகவினரே சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். எஸ்.எம்.எஸ். என்றால் எடப்பாடியின் அட்வைஸர் சுனில், எடப்பாடியின் மகன் மிதுன், முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. சத்யமூர்த்தி ஆகியோர் பெயரின் முதல் எழுத்துகள்தான். 

 

இந்த அணிக்கு கட்டுப்படுவதாக ஓ.பி.எஸ். ஒத்துக்கொண்டாலும், அவர் தரப்பில் முணுமுணுப்பு குறையலை என்கிறார்கள். அதுபோல கட்சியின் சீனியர்கள் பலரும், கட்சியில் எந்த பொறுப்புமில்லாத யாரோ மூணு பேரு நம்மை நாட்டாமை பண்ணுவதா என்று கொந்தளிக்கிறாங்களாம். இருந்தாலும், இப்போதைக்கு எஸ்.எம்.எஸ். மூலம்தான் நிலைமையை சமாளிச்சாக வேண்டிய இடத்தில் அ.தி.மு.க. இருக்கிறது என்று மேலிட தலைவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் அடுத்தடுத்த திட்டங்கள்..ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

EPS-led AIADMK's next plans

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக் கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ், தங்கமணி, பொன்னையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

அதிமுக தற்போது இரு தரப்பாக இருக்கும் நிலையில் மொத்தம் இருக்கக்கூடிய 75 மாவட்ட செயலாளர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள 69 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். 61 பழனிசாமி சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

அதிமுகவின் பொன்விழா ஆண்டினை முன்னிட்டு தமிழகம் எங்கும் பொதுக்கூட்டம் நடத்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் 17ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

அதிமுகவின் துணை சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ஓபிஎஸ் மற்றும் துணை கொறடாவாக இருந்த மனோஜ் பாண்டியனையும் நீக்கி புதிய துணை சட்டப்பேரவை தலைவராக ஆர்.பி.உதயகுமாரையும் துணை கொறடாவாக  அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவைக்கு கடிதம் வழங்கி இருந்தது. இது குறித்து சபாநாயகர் முடிவு ஏதும் எடுக்காத நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. 

 

Next Story

முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு; என்ன செய்திருக்கிறார்கள் இந்த ஐவர்..?

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

 

economic advisory team in tn govt

 

16- வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று (21/06/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. தமிழக ஆளுநர் உரையில் பொருளாதார ஆலோசனை குழு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. 

 

அதில், தமிழக முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைப்பது குறித்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. நோபல் பரிசுப் பெற்ற எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், நாராயண், பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் இந்த பொருளாதார ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் மூன்று பேர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பின்னணி குறித்து இத்தொகுப்பில் பார்ப்போம்.

 

ரகுராம் ராஜன்:

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரகுராம் ராஜன். இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்ற மிகப்பெரிய பதவியில் இருந்தவர். கடந்த 2008- 2009 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும் என முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை மணியை அடித்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை ஆலோசகராக இருந்தவர். மத்திய பா.ஜ.க. அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியவர். பண மதிப்பு நீக்கம், சரியான முறையில் அமல்படுத்தப்படாத ஜி.எஸ்.டி. போன்றவை பொருளாதாரத்தின் வேகத்தைக் குறைத்து விட்டதாக மத்திய அரசைச் சாடியவர்.

 

அரவிந்த் சுப்ரமணியன்: 

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அரவிந்த் சுப்ரமணியன் உலக வங்கியில் முக்கிய பதவிகளை அலங்கரித்தவர். பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசகர் குழுவில் 2014- ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் இடம் பதவி வகித்தார். பண மதிப்பு நீக்கத்தின் போது தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தார். இவரது பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய அரசு முன் வந்த போதும், அதை மறுத்துவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கிருந்து இந்தியா திரும்பிய பின் ஹரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் அவர் பேராசிரியராகப் பணியாற்றினார். 

 

எஸ்தர் டஃப்லோ: 

பிரான்ஸ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் எஸ்தர் டஃப்லோ. இவர் அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியராக உள்ளார். வறுமை ஒழிப்பு குறித்து இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் ஆய்வுகளை நடத்தியுள்ளார். 2019- ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை கணவர் அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து பெற்றுள்ளார். ஏழை, எளியோரின் வறுமையைப் போக்குவதற்கான ஆய்வுகளை முன்னிலைப்படுத்தியவர். 2013- ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கீழ் செயல்பட்ட உலகளாவிய பொருளாதார ஆணையத்தின் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். 

 

ஜீன் ட்ரீஸ்:

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ். இவர் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு கிராமப் புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர். இவர் சமூக செயற்பாட்டாளரும் கூட. ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை முன்னெடுத்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில், பொருளாதார ஆய்வுக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். கல்வி, வேலை வாய்ப்பு, குழந்தைப் பராமரிப்பு போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

 

எஸ்.நாராயண்:

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.நாராயண் சென்னையைச் சேர்ந்தவர். இவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். 1965- ஆம் ஆண்டு முதல் 2004- ஆம் ஆண்டு வரை மாநில அளவிலும், மத்திய அரசிலும் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். நிதி, தொழில்,  வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, எரிபொருள், விவசாயம், சாலை வசதி எனப் பல துறைகளில் தலைமை வகித்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். அதேபோல், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் நிதிச் செயலாளராக இருந்துள்ளார். பணி ஓய்வுபெற்ற பிறகும், பல தொழில் நிறுவனங்களுக்கு இன்றும் ஆலோசகராக இருந்து வருகிறார்.