CM mk stalin says There is no place for divisive ideas in educational institutions 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக முதல்வரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (16.04.2025) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், அனிதா ராதாகிருஷ்ணன், ரகுபதி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மு.பெ. சாமிநாதன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

மேலும் தலைமை செயலாளர் நா. முருகானந்தம், உயர்கல்வித் துறை செயலாளர் சி. சமயமூர்த்தி 10 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், 12 பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “உலகெங்கிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்புகளிலும், ஆராய்ச்சிப் பொறுப்புகளிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

Advertisment

அவர்களில் பலரும் நமது தாய்த் தமிழ்நாட்டிற்கு, நமது இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாகவும், மாநிலத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் தயாராக இருக்கின்றார்கள். அவர்களது திறமையையும், அறிவையும் பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டில் தமிழ் டேலன்ட்ஸ் பிளன் (Tamil Talents Plan) எனும் திட்டம் வகுக்கப்பட வேண்டும். அதன்மூலம் அயல்நாட்டில் உள்ள நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களின் பங்களிப்புடன் நமது கல்வி நிறுவனங்கள்,ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.அதுமட்டுமல்ல; தற்போது அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் மேற்கொண்டு வரக்கூடிய பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கைகளினால் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக அந்நாட்டில் இருக்கும் தமிழ்கத்தைச் சார்ந்த திறமை வாய்ந்த பொறியாளர்கள், அறிவியல் அறிஞர்கள் தாய் நாடு திரும்பும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

அத்தருணத்தில் அவர்களது திறமையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுடன் இணைந்து ஆராய்ச்சிப் பணிகளிலும், உயர் கல்வி அமைப்புகளிலும் உலகத் தரத்தினைக் கொண்டுவர ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வழிவகைகள் செய்திடவும் நீங்கள் உரிய நடவடிக்கைகளை, முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்திட விரும்புகிறேன். அடுத்து நான் முக்கியமாக ஒன்றை இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். கல்வி நிலையங்களில் அறிவியல்பூர்வமான கருத்துகளும், கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அங்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக்கதைகளையோ தவறியும் மாணவர்களிடையே பரப்பிடக் கூடாது.

Advertisment

CM mk stalin says There is no place for divisive ideas in educational institutions 

கல்வியின் அடிப்படையே அறிவைச் செம்மைப்படுத்துவதுதான். அறிவியல்ரீதியான உண்மைகளையும், உயர்ந்த மானுடப் பண்புகளையும் போதிப்பதுடன், மாணவர்களிடையே சமத்துவத்தையும். சமநீதியையும் கற்பிப்பதுதான் தலையாய கடமையாக இருக்க வேண்டும். பிரிவினையைத் தூண்டும் கருத்துகளுக்கோ, நடவடிக்கைகளுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை. இதில் எவ்விதமான சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள இயலாது. இதை மனதிலே கொண்டு கடமையைச் செவ்வனே செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனப் பேசினார்.