Skip to main content

 ’குடிதண்ணீர் தருவதிலும் சாதி பார்க்குறாங்க...’ - அயிலம் மக்கள் மறியல்

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

 


வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த அயிலம் ஊராட்சி மிகப்பெரியது. 500 குடும்பங்களுக்கு மேல் சுமார் 1500 ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு குடிதண்ணீர் வழங்குவதில் ஏகப்பட்ட பாகுபாடு பார்க்கின்றனர் என ஆதிதிராவிட மக்கள் ஏப்ரல் 25ந்தேதி காலை ஆற்காடு – செய்யார் சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

 

a


மறியலில் ஈடுப்பட்டிருந்த பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதிக்கென குடிநீர் சப்ளை செய்ய 7 ஆழ்துளை கிணறுகளும், 2 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளும் உள்ளன. ஆனால், எங்களுக்கு தண்ணீர் வருவது என்னவோ 15 தினங்களுக்கு ஒருமுறை தான். மற்ற நாட்களில் நாங்கள் பக்கத்து ஊர்களில் போய் தண்ணீர் எடுத்து வருகிறோம்.


இதுதொடர்பாக நாங்கள் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள செயலாளரிடம் கேட்டபோது, கிணற்றில் தண்ணீரில்லை என பதில் சொல்கிறார். அதுவே குடியானவர்கள் பகுதிகளுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் தர எங்கிருந்து தண்ணீர் வருகிறது. நாங்களும் மனிதர்கள் தானே. எங்களுக்கும் இந்த அதிகாரிகள் தண்ணீர் வழங்கினால் என்ன என கேள்வி எழுப்பினர்.

 

a

 

அதோடு, எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. மற்ற பகுதிகளில் ஓரளவாவுது தூர் வாருகின்றனர். இதனால் எங்கள் பகுதி அசுத்தமாக உள்ளது. பலப்பல நோய்கள் குழந்தைகளுக்கு வருகின்றன. இதனையும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள செயலாளர் கண்டுக்கொள்வதில்லை என குற்றம் சாட்டினர்.


சாலை மறியல் விவகாரத்தை கேள்விப்பட்டு ஆற்காடு நகர போலிஸார் மற்றும் வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சி துறை அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று, மறியல் செய்த ஆதிதிராவிட மக்களிடம் சரியான முறையில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்கிறோம் என பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதி தந்து மறியலை கைவிட செய்தனர்.


கிராம ஊராட்சிகளில் பெரும்பாலும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களே ஊராட்சி செயலாளர்களாக பதவியில் இருப்பதால் அவர்கள் பெரும்பாலும் சாதி பார்த்தே செயல்படுகின்றனர். ஒடுக்கிவைக்கப்பட்டுள்ள சாதியினர் வாழும் பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, கால்வாய் தூர் வாருதல் போன்றவற்றை செய்வதில் பாகுபாடு காட்டுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அது தற்போது ஆற்காட்டில் குடிநீர் சப்ளை செய்வதில் வெளிப்படையாக வெடித்துள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சார்ந்த செய்திகள்