
திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 300 பேரை மீட்கக்கோரிய மனுவுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், புதுப்பாக்கத்தில் முனுசாமி என்பவரின் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ள துமா பார்தியா, சாட்டி பாரியா, கோபால் சாஹு, ஒஷா பந்து சாஹு உள்ளிட்ட 300 பேரை மீட்க உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ள இவர்கள் தப்பியோட முயற்சித்ததாகக் கூறி, அடியாட்களை ஏவி விட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவில்லை. மேலும், இத்தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் மூலம் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
50 குழந்தைகள் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்காமல், அரசு அதிகாரிகள் கண்மூடி வேடிக்கை பார்க்கின்றனர் என புகார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு நாளை மறுதினம் பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.