
கரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஆன்லைன் வீடியோ மூலம் வாரத்தில் 2 நாட்கள் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளையும், புகார்களையும் கேட்டறிந்து வருகிறார் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன். இவரது புதுமையான முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதோடு பாராட்டும் குவிந்த வண்ணம் உள்ளது. இது திருச்சி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் இடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. லோக்கல் காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார் மனுக்கள் கொடுத்தால் உள்ளூர் பிரமுகர்கள் மூலம் கட்டப்பஞ்சாயத்து செய்து அப்பாவி பொதுஜனத்திற்கு எதிராக நடந்து கொள்வது பெரும்பாலான இடங்களில் நடக்கிறது.
மக்களை அலைக்கழிக்க வேண்டாம் என்பதாலும், தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி நேர விரயத்தை தவிர்க்கலாம் என்ற எண்ணத்தோடும் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ். காணொலி திட்டத்தை கையில் எடுத்துள்ளார். தனது கட்டுப்பாட்டின் கீழ் 5 மாவட்டங்கள் வருவதால் அந்த 5 மாவட்ட மக்களின் குறைகளையும், புகார்களையும் வாரத்திற்கு 2 நாட்கள் இவர் நேரில் கேட்பது வழக்கம். திங்கள்கிழமை, வெள்ளிக்கிழமை என இரண்டு நாட்களும் இவரை சந்தித்து தங்கள் புகார் மீது காவல் ஆய்வாளர் எடுத்த நடவடிக்கைகள், அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் குறித்தெல்லாம் பொதுமக்கள் முறையிடுவார்கள்.
இப்போது கரோனா கால ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லாததால், காணொலி காட்சி மூலம் திங்கள், வெள்ளி ஆகிய இரண்டு தினங்களும் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை பொதுமக்களை சந்தித்து அவர்களின் புகார்களை கேட்டறிகிறார். இந்த முன்மாதிரி முயற்சிக்கு பொதுமக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கரோனாவிற்கு பிறகும் இந்த நடைமுறையை திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தொடர வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.