
துபாயிலிருந்து 326 பயணிகளுடன் ‘துபாய் எமிரேட்ஸ்’ என்ற விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதன்படி இந்த விமானம் விமான நிலையத்தில் நேற்று (25.05.2025) நள்ளிரவு தரையிறங்கத் தயாராக இருந்தது. அச்சமயத்தில் விமானத்தின் மீது லேசர் லைட் அடித்து விமானத்துக்கு வரக்கூடிய சிக்னலை திசை திருப்பும் செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர். இதனால் விமானம் தரையிறங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து இது குறித்து விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்து கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் ஓடு தளத்தில் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. அதே சமயம் விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிறத்தில் மிகவும் சக்தி வாய்ந்த லேசர் லைட்டை விமானத்தின் மீது அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. விமானி சாமர்த்தியமாகச் செயல்பட்டு விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
விமானம் மீது லேசர் லைட் லைட் அடிக்கப்பட்ட சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. முன்னதாக சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனையடுத்து சென்னை விமான நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லேசர் லைட் பயன்படுத்தக் கூடாது, விமான நிலையத்தை சுற்றி 5 கி.மீ. சுற்றளவிற்கு டிரோன்களை பறக்கவிடக் கூடாது என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் திடீரென நேற்று நள்ளிரவில் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.