
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. இத்தகைய சூழலில் தான் கோவை, நீலகிரி ஆகிய இரு மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (26.05.2025) காலை 07.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தின் நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று காலை 10:00 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போன்று தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவையில் உள்ள ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாயில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கால்வாயில் மீன் பிடிக்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.