
வீட்டை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள், சிறுவனை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். தொழிலதிபரான இவர் கடந்த 2022ஆம் ஆண்டு, தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1.70 கோடி தொழில் கடன் பெற்றுள்ளார். அதற்கு ஈடாக, வீட்டின் ஆவணங்கள் மற்றும் கடையின் ஆவணங்களை வங்கிக்கு கொடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில், கடன் பெற்ற சில மாதங்களிலேயே முருகன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதனால் அவரது குடும்பத்தினர், கடன் தொகையை முறையாக வங்கிக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. கடன் தொகை வட்டியுடன் சேர்ந்து ரூ.2.75 கோடியாக அதிகரித்த சூழலில், இது குறித்து வங்கி நிர்வாகம் நாகர்கோயில் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆவணங்களுக்கு சொந்தமான இடங்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி பணியாளர்களின் எதிர்ப்பை மீறி முருகனுக்கு சொந்தமான கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதனை தொடர்ந்து, வீட்டில் இருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வீட்டிற்கு சீல் வைத்தனர். இதில் வீட்டில் இருந்த சிறுவனை குண்டுக்கட்டாக தூக்கி அதிகாரிகள் வெளியே சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.