
மதுரை விளாங்குடி பகுதியில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வடமாநில தொழிலாளி மீது மண் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி விளாங்குடி பகுதியில் பாதாளச் சாக்கடை அமைப்பதற்கான பள்ளம் தோண்டும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. இதில் பள்ளம் தோண்டும் பணியிலிருந்த வடமாநில தொழிலாளி திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிக்கொண்டார். சிக்கிக்கொண்ட தொழிலாளியை மீட்க பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்ட நிலையில் மீட்க முயற்சி மேற்கொண்ட பொழுது தொழிலாளியின் தலை துண்டிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் தொழிலாளியின் தலையை மீட்ட நிலையில் தற்பொழுது உடலை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
தற்பொழுது அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளம் தோண்ட பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் மாநகராட்சி மேயர் இந்திராணி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வடமாநில தொழிலாளி மண் சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.