
தமிழ்நாட்டில் கரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (05/01/2022) உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை (06/01/2022) இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
இரவு நேர ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி?
இரவு நேர ஊரடங்கின் போது பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ், மருத்துவம் சார்ந்த பணிகள், ஏ.டி.எம்.கள், சரக்கு வாகனம், எரிபொருள் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் பெட்ரோல் பங்க்குகள் 24 மணி நேரமும் செயல்பட தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
தொழிற்சாலைகளில் இரவு நேரப் பணிக்கு செல்லும் போது அடையாள அட்டை, தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கின் போது மாநிலத்திற்குள், பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதிக்கப்படும்.
மாநிலங்களுக்கிடையே பொது மற்றும் தனியார் பேருந்து சேவைகள், இரவு நேர ஊரடங்கின் போது தொடரும்.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு!
தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் ஜனவரி 9- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
ஜனவரி 9- ஆம் தேதி அன்று உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20- ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.
அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9- ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வைக் கருத்தில் கொண்டு 10, 11, 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும்.
பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து திரையரங்குகளிலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.
உற்பத்தி ஆலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.
வார இறுதி நாட்களில் மீன், காய்கறி சந்தைகளில் கூட்டத்தைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து பொருட்காட்சிகள், புத்தக கண்காட்சிகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள், புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50% பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்க அனுமதிக்கப்படும்.
அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் ஜனவரி 9- ஆம் தேதிக்குள் கட்டாயம் கரோனா தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைத் தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களில் இருந்து செல்லும் பேருந்தை மண்டல வாரியாக பிரித்து அனுப்ப வேண்டும். மண்டல வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமானம், ரயில், பேருந்து நிலையங்களுக்கு செல்ல வாடகை, சொந்த வாகனங்களை பயன்படுத்தலாம்; பயணிகள் டிக்கெட் வைத்திருப்பது அவசியம்.
இவ்வாறு தமிழ்நாடு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.