Skip to main content

ரத்த தானம் செய்ய அழைத்து இளைஞரிடம் கிட்னி திருட்டு! - மதுரையில் பரபரப்பு!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018
stu


ரத்த தானம் செய்வதற்காக அழைத்து தனியார் மருத்துவமனையில் இளைஞரிடம் இருந்து கிட்னியை நூதனமாக திருடியுள்ள சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எஸ்.பி அலுவலகத்தில் நேற்று வந்த ஒரு பெண், தனது மகனின் கிட்னியை தனியார் மருத்துவமனை நூதனமாக திருடிவிட்டதாக எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். அப்போது, அதை கேட்ட எஸ்.பி உள்ளிட்ட போலீசார் பெரும் அதிர்ச்சியைடைந்தனர். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில்,

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்தவர் ஷகீலா. இவரது மகன் முகம்மது பக்ருதீன் (18). ‘‘மதுரை அருகே கொட்டாம்பட்டியை சேர்ந்த உறவினர் ராஜா முகம்மது, பஷீர் அகமது என்பவருடன், 2017, அக்டோபர் மாதம் எனது வீட்டிற்கு வந்தார்.

 

 

அப்போது, பஷீர் அகமதின் மகன் அசாருதீனுக்கு ரத்தம் தேவைப்படுவதாக கூறி, எனது மகன் முகம்மது பக்ருதீனை மதுரை வளர்நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். திடீரென எனது மகனின் ரத்தத்தில் கிருமி இருப்பதாக கூறி, சிகிச்சை அளிக்க வேண்டுமென தெரிவித்தனர். இதற்கு என்னிடமும் கையெழுத்து பெற்றுக்கொண்டு, ஒரு மாதம் மருத்துவமனையில் தங்க வைத்தனர்.

அந்த சமயத்தில், எனது மகனின் இடதுபுற கிட்னியை எடுத்து அசாருதீனுக்கு பொருத்தியுள்ளனர். இது எங்களுக்கு தெரியவில்லை. ஒரு மாதத்திற்கு பிறகு வீடு திரும்பிய எனது மகன் பக்ருதீன் நடக்கமுடியாமல், உடல் சோர்வான நிலையில் காணப்பட்டார். இதைத்தொடர்ந்து சந்தேகத்தில் வேறு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தோம்.

அப்போது, பக்ருதீனின் கிட்னி எடுக்கப்பட்டிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தோம். உடனடியாக உறவினர் ராஜா முகம்மது மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து, சம்பவம் குறித்து மேலூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராஜமுகம்மது தரப்பினருக்கு ஆதரவாக மேலூர் காவல்நிலைய போலீஸ் செயல்பட்டது என அவர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க மேலூர் சரக டிஎஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளதாக மதுரை எஸ்பி மணிவண்ணன் ஷகீலாவிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்தும் பிறரை வாழுவைக்கும் இளைஞர்! ஈரோட்டில் நடந்த இரு நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Two people underwent kidney transplant today in Erode
முகமது அனிஷ்

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் ஒரே நாளில் இரண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லோகராஜன் (21) என்ற வாலிபருக்கு, கடந்த 12ம் தேதி விபத்து ஏற்பட்டது.  அதில் படுகாயமடைந்த அவர் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கு கடந்த 15ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, லோகராஜனின் பெற்றோர், லோகராஜனின் உடல் உறுப்புகள் தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, லோகராஜனின் ஒரு சிறுநீரகம் தானம் பெறப்பட்டு, ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் 15 நிமிடத்தில் கொண்டுவரப்பட்டு, கடந்த 5 வருடங்களாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த முகமது அனிஷ்(29) என்பவருக்கு  சிறுநீரகம் பொருத்தப்பட்டது.  இதேபோல், தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் தங்கராஜ்(58) என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக சிறுநீராக  செயலிழப்பு ஏற்பட்டு  ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  தங்கராஜியின் மனைவி சரோஜா (52), சிறுநீரகத்தை அவரது கணவருக்கு தானம் செய்ய விருப்பம் தெரிவித்தார். இதன்பேரில், சரோஜாவிடம் இருந்து சிறுநீரகம் தானம் பெறப்பட்டு, தங்கராஜிக்கு சிறுநீரகம் லேப்ரோஸ்கோப்பி மூலம் சிறிய துளை போடப்பட்டு, சிறுநீரகம் அறுவை சிகிச்சை செய்து மாற்றப்பட்டது.

இந்தச் சிகிச்சைகள், தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் ஆணைப்படி, ஒரே இரவில் இருவருக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சுமார் 12 மணி நேரம் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், சிறுநீரக சிறப்பு மருத்துவர் டி.சரவணன் தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை நடைபெற்ற பின்பு நோயாளிகள் இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர் என டாக்டர் சரவணன் தெரிவித்தார்.

Next Story

அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்தா? - டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் விளக்கம்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Srikala Prasad - water issue

 

சிறுநீரக கற்கள் ஏற்படாமல் இருக்க எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், என்னென்ன சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என்பது குறித்து டாக்டர்  ஸ்ரீகலா பிரசாத் விளக்குகிறார்

 

தண்ணீரே குடிக்காமல் இருப்பது போல, அதிகமாக தண்ணீர் குடிப்பதும் சிறுநீரகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். தினமும் இரண்டரை லிட்டர் வரை தண்ணீர் குடித்தால் போதும். சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட்டால் அதை குணப்படுத்த மாத்திரைகள் இருக்கின்றன. பெரிய கற்கள் இருந்தால், சிறிய துளை போட்டு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை நீக்கலாம். கற்களின் தன்மையை முழுமையாக ஆராய்ந்து, அதற்கேற்ற வகையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் சிறுநீரக கற்களை கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். 

 

அப்படி விடுவதால் கற்களின் அளவு பெரிதாகிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்துவிடுவார்கள் என்று பயப்பட வேண்டாம். உங்களுடைய சிறுநீரக கல்லின் தன்மையைப் பொறுத்து தான் அதற்கான சிகிச்சையும் முடிவு செய்யப்படும். சிறுநீரகத்தில் கற்கள் இருந்து, வலி ஏற்படாமல் இருந்தால் உங்களுடைய சிறுநீரகம் வேலை செய்யவில்லை என்று அர்த்தம். எனவே வலி ஏற்படவில்லை என்பதற்காக கவனமில்லாமல் இருந்து விடாதீர்கள். எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

 

சரியான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் அதிகம் உப்பு சேர்ப்பதால் சிறுநீரக கற்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தயிர் சாதத்தில் உப்பு சேர்க்காதீர்கள். ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். பாட்டிலில் வரும் குளிர்பானங்களைத் தவிருங்கள். மோர், இளநீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. பாலில் உள்ள கால்சியம் சத்து உடலுக்கு மிகவும் தேவையானது. எனவே நாம் நிச்சயம் பால் சாப்பிட வேண்டும். பாலை முற்றிலுமாக நிறுத்தினால் சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும். எப்போதும் Balanced Diet எடுத்துக்கொள்வதே சரியானது.