Skip to main content

பொங்கல் திருநாள்; அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Greetings leaders on Pongal festival

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “உயிர்கள் அனைத்திற்கும் உணவளிக்கும் உழவர் பெருமக்களின் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக பா.ஜ.க சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்பொங்கலும், செங்கரும்பும், காய்கனிகளும் படைத்து, காரிருள் அகற்றும் கதிரவனை வணங்கி நன்றி சொல்லி இந்நன்னாளைக் கொண்டாடுவோம். அனைவர் இல்லங்களிலும், நலமும், வளமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும். பொங்கலோ பொங்கல்!” என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில், “ஓயாது ஒளி வீசும் உதயசூரியனையும், உயிரெனக் கொண்டிருக்கும் தமிழையும், மெய்யெனப் பற்றியிருக்கும் தமிழ்நாட்டையும் கொண்டாடிடப் பிறக்கும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள், அனைவருக்கும் சிறப்புற அமைய எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், “உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு என் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘தை பிறந்தால், வழி பிறக்கும்’ என்பார்கள். இந்த தை மாதம் சேலத்தில் நடக்கவிருக்கும் நம் திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டில் ஒன்று கூடி, இந்திய ஒன்றியத்துக்கே வழிபிறக்கின்ற வகையில் அயராது உழைத்திட உறுதியேற்போம். மாநில உரிமையை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காத்திட தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் சூளுரைப்போம்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள், விதைத்த பொருளின் விளைச்சலைப் பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள், சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக் கொண்டாடும் நாள் என மகிழ்வுகளை அள்ளி வரும் தைப்பொங்கல் நாளில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்