
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. 138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 114 இடங்களிலும், அதிமுக 12 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 285 இடங்களில் திமுகவும், 32 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது.
கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மேற்கு மாவட்டங்களில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் பேரூராட்சியை திமுக நீண்ட நாட்களுக்கு பிறகு கைப்பற்றியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலுமணி தர்ணா போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.