Skip to main content

விதிகளை மீறி அமைச்சர் நடத்திய கட்சி கூட்டம்... ஊரில் இருந்தும் அழைக்கப்படாத அமைச்சர்

Published on 26/08/2020 | Edited on 26/08/2020

 

admk

 

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 25ந் தேதி நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், பேரூர், ஊராட்சி, நகராட்சி என அனைத்து பகுதியில் இருந்தும் அ.தி.மு.க.வினர் சுமார்  500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது  அரசின் விதிகளை பின்பற்றாமல் பங்கேற்றனர்.

 

தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் அரசு சார்பில் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அதேநேரத்தில் மக்கள் கூடும் சமய நிகழ்வுகள், அரசியல் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில்  ஆளும் அ.தி.மு.க. அமைச்சர், அரசு விதிகளை மீறி தொற்று பரவும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடத்தியது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இதுக்குறித்து அனுமதியின்றி நடைபெற்ற கூட்டம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அமைச்சர் பங்கேற்றுள்ள கூட்டம் என்பதால் நடவடிக்கை எடுக்க யாரும் முன் வரவில்லை.
 

அதேநேரத்தில் இந்த நிகழ்ச்சி வாணியம்பாடி நகரில் நடைபெற்றது. இந்த கட்சி நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான நிலோபர்கபிலை அழைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. இது வாணியம்பாடி நகரத்தில் நிலோபர் ஆதரவாளர்களை கொதிப்படைய செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்