
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் சட்டத்துறைச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ நேற்று (22.05.2025) மாலை 04.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் டாஸ்மாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பேசுகையில் , “முறையற்ற முறையில் உயர் அதிகாரிகளின் வீட்டில் சோதனை செய்வது , தமிழக அரசு அலுவலகங்களில் சோதனை செய்வது உள்ளிட்ட முறையீடுகளை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு மூலம் தாக்கல்செய்யப்பட்டு விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, அமலாக்கத் துறை தன்னுடைய வரம்பை மீறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசாங்கம் சார்பில், இதுபோன்ற செயல்கள் மாநில சுயாட்சிக்கு எதிரானவை என்பதை குறிப்பிட்டு ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தோம். அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி அமலாக்கதுறையின் நடவடிக்கைக்குத் தடை விதித்துள்ளது. தடை விதித்தது மட்டும் அல்லாமல், அமலாக்கத் துறை தன்னுடைய வரம்புகளை செயல்படுகிறது என்பது இரண்டாவது முறையாகவும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசாங்கம் இத்தனை நாள் சொல்லி வந்த, அமலாக்கத் துறையின் செயல்பாடுகள் மாநில சுயாட்சிக்கு எதிரானவை; அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவை என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அமலாக்கதுறையின் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்துள்ளது.
எங்களின் வாதத்தின்போது, 2014ஆம் ஆண்டு முதல் இப்போது வரை டாஸ்மாக் ஊழியர்கள் மீது கணக்கில் வராத பணம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்வார்கள். அதன்பிறகு அந்தப் பணத்திற்கு கணக்கு கொடுத்தால் அந்த வழக்கு முடித்து வைக்கப்படும். அதற்கு தகுந்த முகாந்திரம் சொல்லாவிட்டால் லஞ்ச ஒழிப்புதுறை மேல் நடவடிக்கையை எடுக்கும். அப்படி பார்க்கும்போது, பதியப்பட்ட 47 வழக்குகளில் பெரும்பாலான வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உரிய விளக்கத்தை கொடுத்த பிறகு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. சில வழக்குகளில் விடுதலையும் கிடைத்துள்ளது. இந்த வழக்குகளை முகாந்திரமாக வைத்துக்கொண்டு அமலாக்கத் துறை டாஸ்மாக் நிறுவனத்திற்கு உள்ளேயே சென்று ரெய்டு நடத்துவது முறையற்றது.
அமலாக்கத்துறை ஒரு வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால், அதற்கான மூல வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை மட்டும்தான் விசாரிக்க முடியும். 50 ஆயிரம், 1 லட்சம் என கணக்கில் வராத பணம் வைத்திருந்தார்கள் என்ற வகையில் போடப்பட்ட மூல வழக்கை வைத்துக்கொண்டு அமலாக்கதுறை டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்று, அரசியல் காழ்ப்புணர்சி காரணமாக ரெய்டு நடத்தி 1000 கோடி ருபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக அரசியல்வாதிகள் போல அமலாக்கத் துறை அறிக்கை விடுவது சட்டத்திற்கு புறம்பானது. அதைத்தான் தமிழக அரசாங்கமும், திமுகவும் சொல்லிக்கொண்டே வந்தோம். அதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு தடை விதித்துள்ளது.

அமலாக்கத் துறை அனைத்து வகையான வரம்புகளையும் மீறியுள்ளார்கள் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நடைமுறைச் சட்டம், அரசியல் அமைப்பு சட்டம், மாநில சுயாட்சி போன்ற அரசியல் அமைப்பின் அடிப்படை தத்துவத்தையும் மீறி செயல்பட்டுள்ளார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அமலாக்கத் துறை சட்டங்களை எல்லாம் துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள். இந்த காரணங்களால்தான் உச்சநீதிமன்றம் அமலாக்கத் துறை எல்லை மீறி செல்வதாகக் கூறியுள்ளது. அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை ஏதோ ஒரு வழக்கை முகாந்திரமாகக் கொண்டு நடந்தது அல்ல. 2014ஆம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட 39 வழக்குகளையும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போடப்பட்ட 7 வழக்குகளையும் சேர்த்து அனைத்து வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து முதன்மை வழக்காக எடுத்துகொண்டுள்ளார்கள். இதில் அந்தந்த ஊழியர்களைப் பற்றி விசாரிக்காமல், டாஸ்மாக்கின் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தியதுதான் மாநில சுயாட்சிக்கு எதிரானது என கூறுகிறோம்.
அமலாக்கத் துறை நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள இந்தத் தீர்ப்பு, இந்தியா முழுமைக்குமான ஒரு தீர்ப்பாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். முதன்முறையாக உச்சநீதிமன்றம் அமலாக்கத் துறையைப் பார்த்து, மாநில சுயாட்சிக்கு எதிராக நீங்கள் நடக்கிறீர்கள் என கூறியுள்ளது. பாஜக அல்லாமல், எதிர்கட்சி கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை ஒட்டி நடைபெறுவதுதான் இந்தச் சோதனைகள் என்பதை நாங்கள் சொல்லாமலே மக்கள் அறிவார்கள். உச்சநீதிமன்றம் இதை உன்னிப்பாகக் கவனித்து, அரசியல் ரீதியாக அமலாக்கத் துறை செயல்படுகிறது என்பதை உச்சநீதிமன்றமே இப்போது கூறியுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA - The Prevention of Money Laundering Act) படி, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதே சட்டத்தில் இடம் உள்ளது. அதைப் பயன்படுத்து உரிய நேரத்தில் உரிய நடவடிக்கையைத் திமுக எடுக்கும். மேற்கு வங்கம், டெல்லி என எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுங்கட்சி நபர்கள் மீது ரெய்டு நடக்காமல், எதிர்கட்சிகள் மீது ரெய்டு நடத்தி, அவர்களை பாஜகவில் இணைந்த பிறகு புனிதர்கள் ஆக்கப்பட்டு, அமலாக்கத் துறையின் நடவடிக்கை கைவிடப்படுகிறது” எனத் தெரிவித்தார்.