Skip to main content

“உயர்த்தப்பட்ட வரிகளை திரும்பப் பெற வேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்! 

Published on 24/05/2025 | Edited on 24/05/2025

 

 EPS Insist The increased taxes must be withdrawn

கிராமங்களில் உள்ள ஓலைக் குடிசைகள், ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடுகள் உள்ளிட்ட அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி  கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்த 48 மாதங்களில், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு இரண்டு முறைகளுக்கு மேல் சொத்து வரியை உயர்த்தியது.

அத்தோடு, இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வையும் அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, இந்த ஆண்டு (2025-2026) முதல் தமிழகத்தில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் உள்ள ஒலைக் குடிசைகள், ஓடு மற்றும் ஆஸ்பெட்டாஸ் வீடுகள், கான்கிரீட் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் சொத்து வரியை உயர்த்தியதுடன், புதிய வரியை வசூலிக்க அதிகாரிகளை வற்புறுத்தி வருகிறது.2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த  திமுக ஆட்சியில், சொத்துவரி, குடிநீர் கட்டணங்கள், கழிவுநீர் அகற்றல் கட்டணம் மற்றும் மின் கட்டணங்கள் ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்தப்படுகின்றன.

மேலும், உணவுப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலைகள் பலமடங்கு உயர்வு, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் நடமாட்டம், மணல் கொள்ளை, டாஸ்மாக் கொள்ளை என்று அனைத்துத் துறைகளிலும் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்று அதிகரித்து வரும் ஊழல், இதன் காரணமாக இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதுதான் 48 மாதகால தி.மு.க. ஆட்சியின் வேதனைகளை தமிழக மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில், 2024-2025ஆம் ஆண்டு முதல் பஞ்சாயத்து பகுதிகளில் புதிதாக வீடு கட்டியவர்கள் மற்றும் வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்கள், வீட்டின் கட்டுமானப் பரப்பை அளந்து வரி நிர்ணயம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் புதிய சட்டத்தின்படி ஒரு சதுர அடிக்கு கட்டட வரைபடக் கட்டணமாக சுமார் 37 ரூபாய் செலுத்த வேண்டும்.

மேலும், 2024-2025ஆம் ஆண்டுவரை ஓலைக் குடிசை ஒன்றுக்கு ரூ. 44ம், ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடு ஒன்றுக்கு ரூ. 66ம், கான்கிரீட் வீடு ஒன்றுக்கு ரூ. 121ம் வீட்டு வரியாக செலுத்தி வந்தனர். மேலும், வீட்டு வரி இரசீதில் வீட்டின் பரப்பளவு குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது, உயர்த்தப்பட்ட சொத்து வரியின்படி, 2025-2026 முதல், இனி ஒலைக் குடிசைகளுக்கு அதிகபட்சமாக சதுர அடி ஒன்றுக்கு 40 பைசா முதல் 1 ரூபாய் வரையும், ஓட்டு வீட்டிற்கு சதுர அடி ஒன்றுக்கு 30 பைசா முதல் 60 பைசா வரையும், கான்கிரீட் வீட்டிற்கு சதுர அடி ஒன்றுக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரையும், வீட்டு வரி உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஏற்கெனவே உள்ள பழைய வீடுகளுக்கும் இந்த வரி உயர்வின்படி புதிய வரியை வசூலிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உள்ளாட்சிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளது. இதன்படி, இனி ஊராட்சிகளில் அதிகபட்சமாக 500 சதுர அடி கான்கீரிட் வீடுகளுக்கு ரூ. 500ம், ஓட்டு வீடுகளுக்கு ரூ. 300ம், ஓலை வீடுகளுக்கு ரூ. 200ம் வீட்டுவரி வசூலிக்கப்படும்.

 EPS Insist The increased taxes must be withdrawn

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது ஏழை, எளிய மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கினார். திமுக அரசோ, ஏழை மக்களின் குடிசைகளுக்கு வரியை உயர்த்தி, அவர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இதுதான், இந்த திமுக ஆட்சியின் சாதனை. கடந்த 2024-2025ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள புதிய வரிவிதிப்பு ஆன்லைன் சேவையை இந்த திமுக அரசு முடக்கி வைத்துள்ளதால், புதிதாக வீடு கட்டிய மக்கள், வரி நிர்ணயத்திற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கிராமங்களில் வரைபட அனுமதிக் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணம் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களின் வயிற்றில் அடித்து, அலங்கோல கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரிகளை உயர்த்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்