புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று (21.10.2020) புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
"புதுச்சேரியில் கடந்த ஆறு மாத காலமாக கரோனா பரவாமல் இருக்க அரசு எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தற்போது நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 15 லட்சம் மக்கள் தொகையில் 2.27 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆன்லைனில் ரம்மி விளையாடி வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சூதாட்டத்தால் பலர் தங்களது பணத்தை இழந்துள்ளனர். ஆகவே இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். மேலும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கும் கடிதம் எழுதியுள்ளேன். ரம்மி மட்டுமல்ல அனைத்து சூதாட்ட செயலிகளையும் தடை செய்ய வலியுறுத்தியுள்ளேன்.
புதுச்சேரி சிறையில் இருந்து ரௌடிகள் போன் மூலம் தொடர்பு கொண்டு மாமூல் கேட்கின்றனர். இதனால் வெளியில் கொலை செய்யப்படுகின்றனர். இதற்கு அங்குள்ள வாடர்ன்கள் உதவி செய்கின்றனர். சிறையில் இருக்கும் ரவுடிகள் வெளியில் உள்ள ரவுடிகளை கொண்டு மாமூல் கொடுக்க சொல்லுகின்றனர். இதனால் இதுபோன்று நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அளவுகளை அதிகரிக்க செய்ய உள்ளோம். இதனை கட்டுப்படுத்த வெளியில் உள்ள ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சண்டே மார்க்கெட் இயங்க ஏ.எஃப்.டி திடலில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு இயங்குவதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் " இவ்வாறு அவர் கூறினார்.