/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4778.jpg)
மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இதன் பிறகு ஏற்பட்டு வரும் தொடர் கலவரத்தின் காரணமாக அந்த மாநிலத்தில் நூற்றுக்கணக்கானவர்கள்பலியாகியுள்ளனர். மேலும், பல்லாயிரம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்தத் தொடர் கலவரத்தின் காரணமாக அங்கு இணையச் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்தது. சில மாதங்களுக்கு பிறகு அங்கு இணையச் சேவை வழங்கப்பட்ட போது, கடந்த மே மாதம் 4ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறி அது தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு தற்காலிகமாக இணையச் சேவை மீண்டும் முடக்கப்பட்டது. பிறகு இணையச் சேவை வழங்கப்பட்டபோது, மீண்டும் கலவரங்கள் வெடிக்க துவங்கியது. இதன் காரணமாக மீண்டும் இணையச் சேவை நிறுத்தப்பட்டது. பிறகு அங்கு இணையச் சேவை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “இணையச் சேவை பயன்பாட்டுக்கு வந்த பின்னர் இரு மாணவர்களின் சடலங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மேலும், ஜூலை மாதம் காணாமல் போன அந்த மாணவர்கள் ஹேம்ஜித் (20), மற்றும் லிந்தோய்ங்கம்பி (17) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநில மக்களின் விருப்பப்படி இந்த வழக்கு ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு மாணவர்களைக் கொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க பாதுகாப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த கொடுங்குற்றம் செய்தவர்களுக்கு எதிராக தீர்க்கமான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணிப்பூர் மாநில அரசு, பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அந்த மாநில முதல்வர் பிரேன் சிங், “வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நிச்சயமாக குற்றவாளிகளை பிடிப்போம்” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)