குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுப் பெற்றது.
நாட்டின் 16வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (18/07/2022) காலை 10.00 மணிக்கு தொடங்கிய நிலையில் சரியாக மாலை 05.00 மணிக்கு நிறைவு பெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் களத்தில் உள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூலை 21- ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகத்தில் இருந்து 234 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து, குடியரசுத் தேர்தலில் பதிவான வாக்குப் பெட்டிகளுக்கு சீலிடப்பட்டு அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அமைதியான முறையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் 99.18% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதற்கான மாநில, யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.