Skip to main content

வாகைக்குளம் இன்னொரு சாத்தான்குளமா? வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற விவசாயி சாவு! போராடும் உறவுகள்...

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

சாத்தான்குளத்தையடுத்து இன்னொரு கொட்டடிச்சாவு அம்பலமேறியிருக்கிறது. நீதிகேட்டுக் கொதிப்புடன் மூன்று நாட்களாகப் போராடி வருகின்றனர் உறவினர்கள்.

 

தென்காசி மாவட்டத்தின் கடையம் சமீபமாக இருக்கும் வாகைக்குளம் கிராமத்தின் விவசாயி அணைக்கரைமுத்து. 72 வயதானவர். மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். விவசாயியான அணைக்கரை முத்துவிற்கு அங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் விவசாய நிலமிருப்பதால் மகசூல் செய்திருக்கிறார். மேலும் தோட்டத்தின் ஒரு பகுதியில் காய்கறிகளும் பயிரிட்டிருந்தார்.

 

வனவிலங்குகளிடமிருந்து காப்பதற்காகத் தோட்டத்தில் மின்வேலி அமைத்திருந்தார் என்று வந்த தகவலையடுத்து கடந்த 22ஆம் தேதி நள்ளிரவு கடையம் வனத்துறையின் வனச்சரகர் நெல்லை நாயகம் மற்றும் வனக்காவலர்கள் வந்து அணைக்கரைமுத்துவை விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவர்கள் விசாரணை என்ற பெயரில் விவசாயியைத் தாக்கியதாகத் தெரிகிறது. அன்றைய நள்ளிரவு உங்கள் தந்தைக்கு உடல் நலமில்லை. வந்து அழைத்துச் செல்லுங்கள் என்று வனத்துறையினர், அணைக்கரைமுத்துவின் மகனான நடராஜனுக்குப் போன்மூலம் தகவல் சொல்லி வரவழைத்திருக்கிறார்கள். அங்கே சென்ற நடராஜன் தன் தந்தை பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகியிருக்கிறார்.

 

உடனே வனத்துறையினர் அணைக்கரைமுத்துவைச் சிகிச்சைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கே அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதனையடுத்து வனத்துறையினர் தாக்கியதால் அணைக்கரைமுத்து உயிரிழந்தார் என்றும் நடவடிக்கைக்காக ஆழ்வார்குறிச்சிக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர் உறவினர்கள்.

 

வனத்துறையைச் சேர்ந்த ஐந்து பேர்கள் தனது தந்தையை விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கியிருக்கிறார்கள். அதானல் தந்தை மரணமடைந்தார். எனவே வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆழ்வார்குறிச்சிக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் நடராஜன். காவல் துறையின் பரிந்துரையை ஏற்று அம்பை குற்றவியல் நீதித்துறை நடுவரான கார்த்திகேயன் உறவினர்கள், வனத்துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்களிடம் விசாரணை நடத்திவருகிறார்.

 

இதனிடையே போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட அணைக்கரைமுத்துவின் உடலை வாங்க மறுத்து மூன்றாவது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தியதில் கலந்து கொண்ட தொகுதி எம்.எல்.ஏ.வான பூங்கோதையும் விவசாயின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

 

தொடர்ந்து போராட்டம் வலுவானதையடுத்து அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணமாகப் பத்து லட்சம் மற்றும் விவசாயி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று அறிவித்ததை குடும்பத்தார்கள் ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் அதிகாரிகள், தென்காசி தாசில்தார் உட்பட அனைவரும் குடும்பத்தார்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். அவர்களிடமும் தங்களின் கோரிக்கையைத் தெளிவாகக் குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

 

http://onelink.to/nknapp

 

எனது தந்தையின் உடலை எங்களுக்குத் தெரியாமலேயே உடற்கூறு ஆய்வு செய்துள்ளனர். அதன் ஆய்வறிக்கையும் எங்களுக்குத் தரப்படவில்லை. உடலை மறுபரிசோதனை செய்து ஆய்வறிக்கையைத் தரவேண்டும். வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும். அதன்பிறகே அரசு அறிவித்த நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வோம் என்கிறார் அணைக்கரை முத்துவின் மகளான வசந்தி.

 

வனத்துறையினர் தாக்கியதால்தான் அணைக்கரை முத்து உயிரிழந்தார். நீதி வேண்டும் என்று உடலை வாங்கமறுத்துப் போராட்டம் 4ஆவது நாளாக நீடிக்க, இன்னொரு சாத்தான்குளமாக மாறியிருக்கிறது வாகைக்குளம்.