2011-லிருந்து 2018-ஆம் ஆண்டுவரை 8 ஆண்டுகளுக்கான "கலைமாமணி' விருது வழங்கும் விழா, கடந்த 13-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதாவது ஜெ. ஆட்சிக்கும் சேர்த்து தாமதமாக விருது வழங் கியதை ஒப்புக்கொண்டது எடப் பாடி அரசு. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 201 கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி னார் முதல்வர் எடப்பாடி. "திறமையான, உண்மையான கலை ஞர்கள் பலருக்கு "கலைமாமணி' விருது கிடைக்கவில்லை, அமைச்சர்கள் கை காட்டுபவர்களுக்கே விருதுகள் கிடைத் துள்ளன' என்ற சர்ச்சைக் குரல்கள் மதுரையிலிருந்து ஒலிக்கின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் முத்து ராமலிங்கம் நம்மிடம் விரிவாகப் பேசினார். ""1955-லிருந்து சங்கீத நாடக சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்ததை, 1973-ல் தமிழ்நாடு இயல் -இசை -நாடக மன்றமாக்கி னார் அப்போது முதல்வராக இருந்த கலைஞர். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் இந்த மன்றத்தின் உறுப்பினர் செயலாளராக இருப்பார். அவர்தான் நாடக கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள், ஆர்மோனியம் பின்பாட்டுக் கலைஞர்கள், சினிமா நடிகர்கள் ஆகி யோரை இனம் கண்டு விருதுக்குப் பரிந்துரைப்பார்.
இதுதான் இத்தனை ஆண்டுகால நடைமுறை. ஆனால் இப்போது எடப்பாடி அரசு தங்கவேலு என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியை இயல் -இசை -நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளராகப் போட்டு, எட்டு ஆண்டுகளுக்கான விருது பெறுபவர்களை தேர்ந்தெடுத்து விருதும் வழங்கியுள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் 1923-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 30 ஆண்டுகளாக நான் உறுப்பினராக இருக்கிறேன். மொத்த உறுப்பினர்கள் 400 பேர்.
இதுவரை மொத்தமே 8 பேர்தான் இந்த சங்கத்திலிருந்து "கலைமாமணி' விருது பெற்றி ருக்கிறார்கள். அதிலும் கடந்த 10 ஆண்டுகளாக யாருக்குமே விருது கொடுக்காமல் இப்போதுதான் சிலருக்கு கிடைத்துள்ளது, அதுவும் மதுரையைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த சங்கத்தில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்டோர் 60 வயதைக் கடந்தவர்கள். இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்றால், "கலைமாமணி' விருது பெற்றவர் பரிந்துரை செய்ய வேண்டும். கொஞ்ச காலத்திற்கு முன்பு விருது வாங்கிய எட்டு பேரும் உயிருடன் இல்லாததால், சீனியர் மெம்பர்கள் ஓய்வூதியம்கூட வாங்க வழியில்லாமல் போய்விட்டது.
இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி தங்கவேலு வந்த பிறகு, "ஏய் நல்லா பார்த்துக்க, நானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான்'னு அமைச்சர்களின் சிபாரிசுகளோடு "கலைமாமணி' விருது வாங்கியிருக்கிறார்கள். "விருது வாங்கலையோ விருது'ன்னு கூவிக்கூவி விக்காத குறைதான்''’என்றார் வேதனையுடன். மதுரை இயல் -இசை -நாடக மன்றத்தின் செயலாளரான சோமசுந்தரம் நம்மிடம் பேசும் போது, ""மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு "கொம்பு-தப்பட்டைக் கலைஞர்' என்ற வகையில் "கலைமாமணி' விருது வழங்கி யிருக்கிறார்கள். அந்த வாத்தியக் கலைஞரே அவர் இல்லை. அதேபோல் இசைக்கல்லூரியில் இப்போதுதான் படிப்பை முடித்திருக்கும் கோவிந்தராஜ் என்பவருக்கும் விருது வழங்கி யிருக்கிறார்கள்'' என்றார்.
விருது சர்ச்சை குறித்து தங்கவேல் ஐ.ஏ.எஸ்.சிடம் கேட்டபோது, “மதுரையைப் பொறுத்த வரை கலைஞர்களுக்கான சங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஒவ்வொரு சங்கமும் போட்டி பொறாமையுடன் இருப்பதால், எப்போது விருதுகள் அறிவிக்கப்பட்டாலும் இதே பிரச்சனை தான். என்னைப் பொறுத்தவரை சரியாகத்தான் செயல்பட்டிருக்கிறேன்''’என்கிறார். மதுரையில் மட்டுமல்ல, சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களும் "கலைமாமணி' விருது குறித்துக் குமுறுகிறார்கள். சர்ச்சைகளில் சிக்கி வழக்குகளை எதிர்கொள்ளும் பிரகாஷ் எம்.சுவாமி, நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கு முதல்வர் விருது வழங்கியிருப்பது குறித்து கண்டனக் குரல்கள் பதிவாகின்றன. "கலைமாமணி' விருதுபோல் மற்றொரு விருது சர்ச்சையும் அதே மதுரையிலிருந்து கிளம்பியுள்ளது. தமிழ்நாடு அரசு நிறுவனமான "பூம்புகார் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்' சார்பில், கைவினைக் கலைஞர்கள், சிற்பிகள், ஓவியர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுவது வழக்கம். விருது பெறுவோர், தங்களின் படைப்பை செய்து காட்டும் வீடியோ பதிவை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி.
இந்த விதியை எப்படி மிதிக்கிறார்கள் என்பதை நம்மிடம் சொல்லத் தொடங்கினார் பஞ்சலோக சிலை வடிவமைப்பாளரான மோகன். 1979-லிருந்து பித்தளை கலைப்பொருட்கள் செய்து வருகிறேன். கேரளாவில் 2018-ல் நடந்த பன்னாட்டுக் கைவினைக் கலைஞர்கள் திருவிழாவில், சிறந்த கலைஞர்கள் நான்கு பேரில் ஒருவராக என்னைத் தேர்ந்தெடுத்தது கேரள அரசு. தமிழக அரசின் விருதுக் காக எட்டு ஆண்டுகள் முயற் சித்தும் எனக்கு கிடைக்க வில்லை. இதைவிடக் கொடுமை என்னன்னா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருக்கும் கைவினைப் பொருட்கள் விற்கும் ஒரு கடையில் நான் வடிவமைத்த சிலைகளை வாங்கி, விருதுக் கமிட்டிக்கு அனுப்பி விருதும் வாங்கியிருக்கிறார் கிருஷ்ணன் என்பவர்''’என பொருமினார். இன்னும் எவ்வளவு பொருமல்கள் வெளியில் தெரியாமல் இருக்கின்றனவோ?