Skip to main content

வி.பி.யின் முடிவுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனில் நடக்கும் ஊழலே காரணம்!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடிய வி.பி.சந்திரசேகர் என்கிற தமிழக வீரர் கடந்த வாரத்தில் சென்னை மயிலாப்பூர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். வி.பி.சந்திரசேகர் கிரிக்கெட்டுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர். "சந்திரசேகரை போல பலர் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருக்கிறார்கள்'' என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள். சந்திரசேகரின் கிரிக்கெட் ஆர்வம் அளப்பரியது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கூட தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியைப் பார்த்து விட்டு தான் மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார்'' என் கிறார்கள் அவரது நண்பர்கள்.

 

cricket payer



ஐ.பி.எல். போட்டி கிரிக்கெட் அணிகளின் சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளராக இருப்பவர் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன். அவர் இந்தியாவில் கிரிக்கெட்டை நிர்வகிக்கும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்தவர். தமிழ்நாட் டில் கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பலமான செல்வாக்கு பெற்றவர். அவரது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பணியாள ராக வி.பி.சந்திரசேகர் தேர்வு பெற்றதே கிரிக்கெட் திறமையினால் தான். தமிழகம் இந்திய அணிக்கு தந்துள்ள அதிரடி பேட்ஸ்மேன்கள் இரண்டு பேர். அதில் வி.பி. மிக முக்கியமான வர். இன்று கோலி போன்றவர்கள் ஆடும் கிரிக்கெட் இலக்கணங்களை மிஞ்சாத அதிரடி ஷாட்டுகளுக்கு வி.பி.தான் குரு. இந்தியாவிற்காக ஏழு ஒருநாள் பந்தயத்தில் ஸ்ரீகாந்த் துடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கி கலக்கினார்.
 

cricket player



அதன்பிறகு தமிழக அணி யின் ராஞ்சி டிராபி அணி பயிற்சியாளர், இந்திய அணியின் தேர்வாளர் என உயர்ந்தார். இவற் றோடு தமிழகத்தில் கிரிக்கெட் பயிற்சிக்காக ஒரு மிகப்பெரிய அகாடமியை நடத்தி வருகிறார். ஐ.பி.எல்.லை கலக்கி வரும் சென்னை சூப்பர் கிங்ஸின் மேனே ஜராக பணியாற்றியவர். அந்த அணிக்காக டோனியை கொண்டு வந்து கேப்டன் ஆக்கியவர். கிரிக்கெட்டை இலக்கண சுத்தமாக ஆடுபவர் ராகுல் டிராவிட். அவருக்கே ஸ்வீப்ஷாட் எனப்படும் ஒரு திசையில் வரும் பந்தை துடைப்பத்தில் பெருக்குவது போல் எதிர்திசையில் ஆடும் ஷாட்டை கற்றுக் கொடுத்தவர் என ஏகப்பட்ட பெருமைகளை பெற்றவர் வி.பி.சந்திரசேகர். "எந்த ஒரு இளைஞரின் திறமையையும் எளிதில் கண்டுபிடித்து அவர்களை பட்டை தீட்டுவதில் திறமைமிக்கவர்' என அனில் கும்ப்ளே, டெண்டுல்கர், ஹர்பஜன்சிங் போன்றவர்கள் வர்ணிக்கிறார்கள். கோடிகளில் புழங்கும் கிரிக்கெட் விளையாட்டில் உச் சத்தை தொட்டவரான சந்திர சேகர் தமிழக கிரிக்கெட்டை இன்று வரை ஆடும் உயர்சாதி பிரிவைச் சேர்ந்தவர். அவர் நியாயமாக கோடீசுவரனாகத் தானே இருக்க வேண்டும், "அவர் ஏன் கடன் தொல்லையில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என விசாரித்தோம். வி.பி.யின் முடிவுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனில் நடக்கும் ஊழலே காரணம்' என்கிறார்கள் அவருடன் பழகியவர்கள்.

 

cricket



வி.பி., கிரிக்கெட்டில்தான் அதிரடி பேட்ஸ்மேன். சொந்த வாழ்க்கையில் நகைச்சுவையை அதிகம் விரும்பும் அமைதியான நபர். அதுதான் அவரது உயிருக்கு உலை வைத்துவிட்டது. ஐ.பி.எல். போட்டியில் நடந்த சூதாட்ட புகார்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனும் அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனியும் சிக்கிக் கொண்டார் கள். அந்த அணி இரண்டு ஆண்டு கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட் டது. அந்த சமயத்தில் ஐ.பி.எல். போல, டி.என்.பி.எல். என்கிற போட்டியை அறிமுகம் செய்தார் இந்தியா சிமெண்ட்ஸ் சீனி வாசன். தமிழ்நாட்டுக்குள் நடக்கும் லீக் போட்டி இது.


அதில் "காஞ்சி வீரன்ஸ்' என்ற அணியின் உரிமையாள ரானார் வி.பி.சந்திரசேகர். டி.என். பி.எல்.லில் இடம் பெற்றுள்ள 8 டீம்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை ஒரு பெரிய நாளிதழ் நடத்துகிறது. லைக்கா என்கிற சர்வதேச திரைப்பட தயாரிப்பு நிறுவனம் கோவை அணியை வாங்கியுள்ளது. மதுரை அணியை சீக்கெம் என்கிற ஆயிரம் கோடி ரூபாய் வணிகமுள்ள தொழில் நிறுவனம் நடத்துகிறது. திருச்சி வாரியர்ஸ் அணியை ரூபி பில்டர்ஸ் என்கிற கட்டு மான நிறுவனம் வைத்திருக் கிறது. மற்றவை எல்லாம் வி.பி. போன்ற கிரிக்கெட் அபிமானிகளால் நடத்தப் படுகிறது. இதில் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இன் றும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா சிமெண்ட்ஸ் சீனி வாசனுக்கு எதிராக பேசும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக் கல் ட்ரானிக்ஸ் அணி, சேப்பாக் கில்லீஸ் அணி, ஜோன்ஸ் என்பவர் நடத்தும் தூத்துக்குடி அணி ஆகி யவை தான் இரண்டு முறை பைனலுக்கு வந்துள்ளன. 2018-ஆம் ஆண்டு மட்டும் மதுரை பாந்தர்ஸ் அணி பைனலில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

டி.என்.பி.எல். போட்டியை நடத்துவதற்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வருடத்திற்கு 20 கோடி ரூபாய் வழங்குகிறது. அது தவிர டிக்கெட் விற்பனை, விளம்பரம் என 30 கோடி ரூபாய் வருகிறது. மொத்தத் தில் 2016ஆம் ஆண்டு முதல் 2019 வரை நடந்த 4 போட் டிகளில் மொத்தம் 200 கோடி ரூபாய் வருமானத்தை டி.என்.பி.எல். பெற்றுள்ளது. இந்த 200 கோடி ரூபாய் என்பது டி.என். பி.எல். என்கிற போட்டிக் காக வரும் தொகை. இது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கணக்குகளில் வராது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் என்பது கடுமையான ஆடிட்களுக்கு உட்பட்ட சங்கம். அதற்கான செலவு களுக்கான பணத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தருகிறது. அதிலே முறையான கணக்கு வழக்குகள் இல்லை. அதை ஆடிட் கணக்குக்கு உட்படுத்தாமல் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க முடியாது என்பதால் முழுக்க முழுக்க இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனுக்கு நெருக்கமான அதன் தலைவர் காசி விசுவநாதன், இணைச் செயலாளர் பழனி போன்ற வர்களே நிரந்தர நிர்வாகிகளாக இருக்கிறார்கள்.

வணிக நோக்கத்தில் நடக்கும் டி.என்.பி.எல். போட்டிகள் ஊழல் மலிந்ததாகி விட்டது. டி.என்.பி.எல்.லில் வழக்கறிஞராக இருக்கும் நபர் இதுவரை தனது கட்டணமாக 50 கோடி ரூபாயை வாங்கியிருக்கிறார். சூதாட்டம் -பெட்டிங் புகார்கள் இருந்தாலும் ஐ.பி.எல். போட்டிகள் வெற்றி பெற்றதற்குக் காரணம் அது சென்னை, கல்கத்தா, மும்பை, டெல்லி, ஹைதராபாத், விசாகப்பட்டி னம் போன்ற பெருநகரங்களில் நடத்தப் பட்டதுதான். ஆனால் டி.என்.பி.எல். தமிழகத்தின் பெருநகரங்களில் நடத்தப் படவில்லை. மதுரையிலிருந்து இரண்டு மணி நேரம் பயண தூரமுள்ள முன் னாள் அமைச்சர் நத்தம் விசுவநாத னுக்கு சொந்தமான கல்லூரியின் கிரவுண்ட், திருநெல்வேலியில் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாச னின் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மைதானம் போன்றவற்றில் போட்டிகளை நடத்துகிறார்கள்.

இதனால் போட்டிகளை பார்க்க வருபவர் களின் டிக்கெட் வருமானம் சுத்தமாக இல்லை. வருமானம் இல்லையென்றாலும் வந்த மொத்த வருமானமான 200 கோடி ரூபாய் பல வழிகளில் செலவு செய்யப்படுகிறது. இந்த போட்டிகளில் பங்கு பெறும் அணிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தலா 5 கோடி ரூபாயை டி.என்.பி.எல். நிர்வாகம் இந்த 200 கோடி ரூபாயிலிருந்து தர வேண்டும். அதன்படி பணத்தை கொடுக்காமல் ஒரு கோடி, இரண்டு கோடி என டி.என்.பி.எல். நிர்வாகம் தருகிறது. இது அணி உரிமையாளர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 2 கோடி ரூபாய் நஷ்டத்தை உருவாக்குகிறது.

இந்த நஷ்டத்தை லைக்கா, சீக்கெம் போன்ற தொழில் நிறுவனங்களை நடத்தும் அணிகள் தாங்கிக் கொள்கின்றன. கிரிக்கெட் ஆர்வத்தினால் அணிக்கு உரிமையாளராக மாறிய வி.பி. போன்ற ஆட்களால் தாங்க முடியவில்லை. வி.பி.க்கு மட்டும் கடந்த நான்கு வருடத்தில் 10 கோடி ரூபாயை டி.என்.பி.எல். நிர்வாகம் தந்திருக்க வேண்டும். அதனால் வி.பி. கடன் வாங்கினார். நிலைமை இன்று மாறும் நாளை மாறும் என காத்திருந்தார். எப்பொழுதும் எதையும் புகார் செய்து போராடிப் பெறும் பழக்கமில்லாத வி.பி.யால் கடன் தொல்லைகளைத் தாங்க முடியவில்லை. அவரால் வட்டி கட்ட முடியவில்லை. டி.என்.பி.எல். நிர்வாக மும் உதவி செய்ய முன்வரவில்லை. "உங்களுக்கு கொடுத்தால் மற்ற அணிகளும் கேட்கும்' என கதவை ஓங்கி சாத்தி விட்டார்கள்.

"ஐ.பி.எல். போட்டிகளில் வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்வது போல, அடுத்த டி.என்.பி.எல். போட்டிகளில் வெளிமாநில வீரர் களை களமிறக்குவோம். அப்பொழுது லாபம் வரும். கடனை அடைத்து விடுங்கள்' என அட்வைஸ் தரப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜயசங்கர், அபினவ் முகுந்த், பாபா அபரஜித், பாபா இந்திரஜித் போன்ற பத்து வீரர்கள் தவிர வேறு யாரும் கிரிக்கெட்டில் மின்னுவதற் குத் தமிழ்நாடு கிரிக்கெட் வாரி யம் அனுமதிக்கவில்லை. திறமையான வீரர்களை வி.பி. கண்டுபிடித்த போதும் அதை மற்றவர்கள் ஆதரிக்க வில்லை. இனிமேல் இந்தியா முழுவதுமிருந்து வீரர்கள் வந்து டி.என்.பி.எல். ஒளிபெறும் என்கிற நம்பிக்கையை வி.பி. இழந்துவிட்டார். கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழல் அவர் உயிரைப் பறித்துவிட்டது.

வி.பி.யின் தற்கொலை தமிழகத்தின் உண்மை யான கிரிக்கெட்டின் மரணம் என விவரிக்கிறார்கள் அவரது நண்பர்கள். இதுபற்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகியான காசி விசுவநாதனை தொடர்பு கொண்டு கேட்டோம். நீண்ட நேரம் அவர் பதில் சொல்லவில்லை. அதன்பிறகு நாம் கூறிய குற்றச்சாட்டுகளை கேட்ட அவர், "வி.பி. மிக நல்லவர். அவரது இறப்பு வருத்தத்திற்குரியது. அவரது இறப்புக்குக் காரணம் டி.என்.பி.எல். என்பதெல்லாம் பொய்'' என்று மறுத்தார். உண்மைகள் எப்போது வெளிவரும் என ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள் கிரிக்கெட் ஆர்வலர்கள்.