Skip to main content

வேலூரில் கூட்டணி கட்சியின் ஓட்டுகள் சிதறியதால் வெற்றி யாருக்கு? அதிர்ச்சி ரிப்போர்ட்!

கடந்த 15 நாட்களாக பரபரப்பாக இருந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஓட்டுப்பதிவு ஆகஸ்ட் 5-ந் தேதி காலை 7 மணிக்கு படுமந்தமாகவே தொடங்கியது. தொகுதியில் 14,32,099 வாக்குகள் உள்ளன. இதற்காக 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடை பெற்றது. இதில் 850 மையங்கள் பதட்டமானவை என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்தார். ஆளும்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்குச்சாவடி மையங்களை கைப்பற்ற முயலும் என தி.மு.க. தரப்புக்கு வந்த தகவலைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவை குழு தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. அனைத்து வாக்குச்சாவடிகளையும பதட்டமானவை என அறிவிக்க வேண்டும் என மனு தந்ததால் அனைத்து சாவடிகளுக்கும் பாதுகாப்பு பலமாக போடப்பட்டது.
 

dmkவாக்குப்பதிவன்று தொகுதியை வலம்வந்தபோது, காலை 10 மணி நிலவரப்படி 7 சதவிகிதம் தான் வாக்குப்பதிவு நடை பெற்றிருந்தது. இதுபற்றி மையத்துக்கு வெளியே அமர்ந் திருந்த அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ""இந்த ஒற்றைத் தொகுதி தேர்தல் இடைத்தேர்தல் போல் நடைபெற்றதால் மக்களுக்கும் கட்சியினருக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு சப்பென போய்விட்டது. நாங்கள் 300 ரூபாய் தந்தோம், தி.மு.க. 200 ரூபாய் தந்தது. இந்தப் பணத்தை தந்தபோது மக்கள் சந்தேகத்தோடு பார்த்தார்கள். இதுதான் என உறுதியாக தெரிந்தபின் சோர்ந்துவிட்டார்கள். இதனால்தான் நாங்களும் வீடு வீடாகப் போய் ஓட்டுப்போட வா என அழைத்து வரவில்லை'' என்றார்கள்.

 

velloreவாக்குப்பதிவன்று பூத் செலவுக்கு ஒரு பூத்துக்கு தி.மு.க. 15 ஆயிரமும், அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 25 ஆயிரமும் தந்து ஊக்கப்படுத்தினர். இன்னும் கூடுதலாக தருவார்கள் என எதிர்பார்த்த பூத் கமிட்டி நிர்வாகிகள் நொந்துபோய் விட்டனர். இதேபோல் பூத்துக்கு வெளியே தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான் களத் தில் நின்றன. தி.மு.க.வோடு கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரிகள், வி.சி.க. நிர்வாகிகள் யாரும் கண்ணில்கூட தென்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளைத் தேடியும் கிடைக்கவில்லை. தொகுதியில் உள்ள பா.ம.க. வாக்குகளை, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வளைத்து விட்டார், அதேபோல் தலித் ஓட்டுக்களை ஏ.சி.சண்முகம் வளைத்துவிட்டார் என்கிறார்கள் களத்தில் உள்ள கட்சியினரே.

 

dmkஇந்த தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் இருவரும் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதற்குக் காரணம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த்தின் ஓட்டு, காட்பாடி காந்திநகர் முகவரியில் உள்ளது. அது வேலூர் மாநகராட்சி பகுதியாக இருந்தாலும், காட்பாடி சட்ட மன்றத் தொகுதிக்குள் -அதாவது அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. அதேபோல் ஏ.சி.சண்முகத்தின் ஓட்டு, ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. இத னால் இருவராலும் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் வாக்களிக்க முடியவில்லை. இவர்கள் மட்டுமல்ல சில சுயேட்சை வேட்பாளர்கள், பதிவு பெற்ற கட்சியின் வேட்பாளர்களும் வாக்களிக்க முடியவில்லை. இவர்கள் எல்லாம் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே, குடியாத்தம் நகரில் காந்திநகர் பகுதி மக்களுக்காக அங்குள்ள அரசுப் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் பதட்டமான சாவடி என்பதால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. வாக்குச்சாவடி மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்த நிலையில், அந்த அறையை திறக்க வந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காரணம், அறையின் பூட்டை உடைத்து பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் திருடப்பட்டிருந்தன. மேலும் அங்கிருந்த 10 கணினிகள் மற்றும் ஒரு ஜெராக்ஸ் இயந்திரமும் திருட்டுப் போயிருந்தது. சி.சி.டி.வி. கேமராக்கள், கணினிகளை திருடிச்சென்ற நபர்கள் குறித்து புகார் தரப்பட்டது.

மதியம் 12 மணி நிலவரப்படி, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் வாக்குப் பதிவின் சதவிகிதம் மந்தமாக இருந்ததால், தொகுதியின் எம்.எல்.ஏ. நந்தகுமார் களத்தில் இறங்கி, இறுதியில் 62% வாக்குப் பதிவாகும்படி பார்த்துக் கொண்டார். இதே போல்தான் ஆம்பூர் தொகுதியில் எ.வ.வேலுவின் ஆட்கள் சுறுசுறுப்பு காட்டியதால் வாக்குப் பதிவின் சதவிகிதம் அதிகரித்தது. ஆனால் அமைச்சர் நிலோபர் கபிலின் தொகுதியான வாணியம்பாடியில் கடைசி வரை 52% இருந்ததைப் பார்த்து அ.தி.மு.க.வினரே அதிர்ச்சியாகிவிட்டனர்.

இறுதிக்கட்ட நிலவரமாக வேலூர் எம்.பி. தொகுதியில் 72% வாக்குகள் பதிவாகியிருந்தன. முஸ்லிம் சமுதாய வாக்குகள் அதே அளவில் பதிவானாலும் அச்சமுதாயத்தின் பெண்கள் வாக்காளர்களின் வாக்குகள் அவ்வளவாக பதிவாகவில்லை. ஆனால் துரைமுருகன் எதிர்பார்த்திருந்த மற்ற சமுதாய வாக்குகள் அதிக அளவில் பதிவாகி, தி.மு.க. தரப்பிற்கு தெம்பைத் தந்துள்ளன. வாக்குப் பதிவிற்கு முதல் நாள் இரவு, ஓட்டுக்கு தலா 1,000 என ரேட்டை உயர்த்திய ஏ.சி.சண்முகம், வாக்குப் பதிவு நாளன்று பிற்பகல் வரை இதே டெக்னிக்கை கையாண்டார். தி.மு.க. தனது வாக்குகளை உறுதிப்படுத்தியது. ஆனாலும் வாக்குப்பதிவு முடிந்தபின் இரு கழகங்களுமே பதற்றத்தில்தான் இருந்தன.