Skip to main content

திமுக மிதப்பில் இருந்தால் ஆட்சிக் கனவு அவ்வளவுதான்?!

Published on 15/08/2019 | Edited on 15/08/2019

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியும் கடைசியாக கிடைத்த வேலூர் தொகுதி வெற்றியும் திமுக தலைமையை மயக்கத்தில் ஆழ்த்தியிருப்பதாக அந்தக் கட்சிக்குள்ளேயே எச்சரிக்கை குரல்கள் எழுந்திருக்கின்றன. சமீபத்திய அறிவாலய நிகழ்வுகளும், தமிழகத்தின் பல பகுதிகளில் திமுகவினர் அணி அணியாக பாஜக பக்கம் ஒதுங்கும் நிகழ்வுகளும் இதை நிரூபிப்பதாக அந்தக் கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

 

dmk after vellore elction

 

 

குறிப்பாக அத்திவரதர் தரிசனத்தைப் போல, திமுக தலைவரை சந்திக்க வருபவர்களிடம் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பணம்படைத்தோர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே ஸ்டாலினின் சிறப்புத் தரிசனம் ஏற்பாடு செய்யப்படுவதாக கட்சிக்காக எதையும் எதிர்பாராமல் உழைத்தவர்கள் குமுறுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் மாவட்டப் பொறுப்புகளில் இருப்போருக்கு எதிரான குழுவினர் திமுகவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லா வகையிலும் கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாகவே இருக்கிறார்கள். லோக்கல் பிரச்சனைகளைத் தாண்டி ஸ்டாலின் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருக்கிறார்கள். அத்தகைய தொண்டர்களும் பிரமுகர்களும் திமுக தலைவரை சந்திக்க விரும்பி அறிவாலயம் வருகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ஸ்டாலினை எளிதாக சந்தித்து சென்றவர்கள் இப்போது, அறிவாலயத்தில் உருவாகியிருக்கும் புதிய பூசாரிகளைத் தாண்டி ஸ்டாலினை சந்திப்பது இயலாத காரியமாகிவிட்டது என்கிறார்கள்.

இப்படி சந்திக்க வருகிறவர்கள், தங்கள் பகுதிகளில் நிலவும் அரசியல் நிகழ்வுகளையும், திமுகவில் இருப்போரை பாஜகவினர் ஆசைகாட்டி இழுக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளையும் ஸ்டாலினிடம் முறையிட விரும்புகிறார்கள். திமுகவைச் சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு செல்வது அதிர்ச்சியளித்தாலும் அதுதான் உண்மை என்று அவர்கள் சொல்கிறார்கள். மத்திய அரசுத் திட்டங்களைப் பெறுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் பாஜகவுக்கு மாறுவதாக வெளிவரும் செய்திகள் திமுக தலைமைக்கு தெரியுமா தெரியாதா என்பதே அடிமட்ட திமுக தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது.

திமுகவைச் சேர்ந்தவர்கள் எப்படி பாஜகவுக்கு செல்கிறார்கள் என்ற அதிர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கே காலம் காலமாக வாக்களித்தவர்கள் எப்படி பாஜகவுக்கு வாக்களித்தார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் நிலைமையின் தீவிரம் புரியும்.

நேற்றுக்கூட, சிக்கிம் சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர்கூட இல்லாத பாஜக, எதிர்க்கட்சியாக இருந்த சிக்கிம் மாநிலக் கட்சியிடமிருந்து 10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, திடீர் புளியோதரை மாதிரி திடீர் எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது.

பணத்தாலும், அரசு சலுகைகளை பெற்றுத்தருவதாலும் வாக்காளர்கள் தங்கள் பக்கம் இழுக்கலாம் என்ற திட்டத்தை பாஜக தீவிரமாக அமலாக்கி வருகிறது. இந்த நிலையில் தொண்டர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டிய தலைவர் ஸ்டாலினை சுற்றி புதிய பூசாரிகள் உருவாகியிருக்கிறார்கள் என்று திமுகவினர் புலம்புகிறார்கள்.

திமுகவிடம் இருந்து இதுவரை அடிமட்ட தொண்டர்கள் எதுவும் பயன் அடைந்ததில்லை. பலன் அடைந்துவிடாதபடி முன்னணி நிர்வாகிகளே தடுத்துவிடுகிறார்கள். காலம் முன்புபோல இல்லை. கொஞ்சம் விட்டிருந்தால் வேலூரில் துரைமுருகனின் மகனை பழிதீர்த்திருப்பார்கள். ஸ்டாலினுக்காக உழைத்த தொண்டர்களால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது. அதிலும் வெளி மாவட்ட திமுக நிர்வாகிகளின் அயராத உழைப்பே வெற்றியைப் பெற காரணமாகியது. முதலில் தன்னால்தான் வேலூரில் கட்சிக்கு செல்வாக்கு இருப்பதாக தோற்றத்தை ஏற்படுத்தும் துரைமுருகன் மாதிரியான ஆட்களின் கொட்டத்தை ஸ்டாலின் அடக்க வேண்டும். இதுபோன்ற சின்ன விஷயங்களை தடுக்கத் தவறியதால்தான் ராகுல் நிலைமை பரிதாபமாக மாறியது என்பதை தலைமை உணர வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

வேலூர் தேர்தலில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் துரைமுருகன் மற்றும் அவருடைய மகனின் படம் மட்டுமே இருந்ததை வெளிமாவட்டத்தில் இருந்து சென்ற நிர்வாகிகள் வேதனையுடன் குறிப்பிடுகிறார்கள். இவருக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு? மற்ற மாவட்ட நிர்வாகிகள் இப்படி செய்திருந்தால் தலைமை சும்மா விடுமா என்று கேட்கிறார்கள்.

ஸ்டாலினை, துரைமுருகன் தலைவராக ஏற்றிருக்கிறாரா அல்லது ஸ்டாலினுக்கே தான்தான் தலைவர் என்று எண்ணியிருக்கிறாரா? என்று தேர்தல் வேலைக்கு சென்றிருந்த மாவட்டச் செயலாளர்கள் பொருமுகிறார்கள்.

ஸ்டாலின் இனியாவது அறிவாலயத்தில் இருக்கும்போது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினரையும் திமுக அணிகளின் நிர்வாகிகளையும் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக திமுகவில் வேகமெடுத்திருக்கும் இளைஞர் அணியைப் போல, மகளிர் அணியையும் சில முன்னுரிமைகளைக் கொடுத்து முடுக்கிவிட்டால் சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக புதிய பலத்துடன் தயாராகும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

திமுக தலைமைக்கு இதெல்லாம் யார் சொல்லப் போகிறார்களோ?