அரசியல் களத்தில் அதிகம் எதிர்பார்க் கப்பட்டது வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு. பணவிநியோகப் புகாரால் நிறுத்தி வைக்கப்பட்ட தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் இரண்டு கழகங்களும் வரிந்து கட்டின. அ.ம.மு.க., ம.நீ.ம. போன்றவை ஒதுங்கிக் கொண்ட நிலையில் நாம் தமிழர் கட்சி களமிறங்கியது. வேலூர் பென்ஸ் பார்க் ஓட்டலில் பிஸியாக பணியைத் தொடங்கினார் இரட்டை இலை வேட்பாளர் ஏ.சி.சண்முகம். தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டது என சட்டமன்றத்தில் வைத்த குற்றச்சாட்டையே வேலூர் தேர்தல்களப் பிரச்சாரத்திலும் வைத்தார் முதல்வர் எடப்பாடி. முஸ்லிம் வாக்குகளைக் கவர்வதற்காக முகமதுஜானை மாநிலங்களவை எம்.பி.யாக்கியதுடன், பா.ஜ.க. தலைவர்களைப் பிரச்சாரத்தில் தவிர்க்கும் வியூகமும் வகுக்கப்பட்டது. 200-க் கும் மேற்பட்ட பொறுப்பாளர் களுடன் அமைச்சர் படை களமிறங்கியது.
அதேநேரத்தில், தி.மு.க. தரப்பில் வழக்கம்போல மு.க. ஸ்டாலின் தேர்தல் பணியை முன்னெடுத்தார். 100-க்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் களமிறக்கப்பட்டனர். மேடைப் பிரச்சாரம்-வேன் பிரச்சாரத்தைக் கடந்து நடைப்பிரச்சாரத்தில் முழு கவனம் செலுத்தினார் ஸ்டாலின். முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. எடுத்த நிலைப்பாடு- என்.ஐ.ஏ. விவகாரத்தில் தி.மு.க. மேற்கொண்ட நிலைப்பாடு ஆகியவை களத்தில் விமர்சனத்திற்குள்ளாகின.
தேர்தல் நிறுத்தப்பட்ட நேரத்திலும், இரட்டை இலையில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரும் புதிய நீதிக் கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் தொகுதியிலேயே தங்கியிருந்து மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் என செயல்பட்டார். அவருடைய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கான சீட் வழங்கிய வகையிலும் ஆதரவுகளைப் பெருக்கி வந்தார். டெல்லிவரை கள நிலவரத்தைக் கொண்டு சென்றதால் பிரதமர் மோடியும் வேலூர் தேர்தலில் தனிக் கவனம் செலுத்தினார். தி.மு.க. வேட்பாளரும் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகனுமான கதிர்ஆனந்த் பெருமளவு கட்சிக்காரர்களை நம்ப வேண்டியிருந்தது. ஏ.சி.எஸ்.ஸுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல்லாத நிலையில் தனிப்பட்ட முறையில் தனது முதலியார் சமுதாய வாக்குகள், நாயுடு சமுதாய ஆதரவு, பா.ம.க. மூலம் வன்னியர் வாக்குகள் எனக் குறி வைத்தார். அ.தி.மு.க. அமைச்சர் நிலோபர் கபில், மாநிலங்களவை எம்.பி. முகமதுஜான் மூலமாக இயன்ற அளவு முஸ்லிம் வாக்குகளைப் பெறும் வியூகமும் வகுக்கப்பட்டது.
தி.மு.க.வுக்கு முஸ்லிம் வாக்குகள் ஆதரவாக அமைய, வன்னியர் சமுதாய வாக்குகளை தன் சொந்த செல்வாக்கு மூலம் திரட்டினார் துரைமுருகன். தலித் உள்ளிட்ட பிற சமுதாய வாக்குகளையும் ஆதரவாக்கும் முயற்சிகள் நடந்தன. ஆகஸ்ட் 5-ந் தேதி 71.51% வாக்குகள் (10,24,352 பேர்) பதிவான நிலையில், 9-ந் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே போட்டி கடுமையாக இருந்தது. தபால் வாக்குகளில் சுமார் 2000 அளவுக்கு செல்லாது என அறிவிக்கப்பட, மீதமிருந்தவற்றில் அ.தி.மு.க. லீடிங் எடுத்தது. முதல் சுற்றும் அதற்கே சாதகமாக இருந்தது. அடுத்த சுற்றுகள் தி.மு.க.வுக்கு லேசான லீடிங் காட்ட, அதன்பிறகு, ஏ.சி.எஸ். வேகமெடுத்தார். முதலியார், நாயுடு, வன்னியர் சமுதாய வாக்குகளால் கிட்டத்தட்ட 7-வது சுற்றுவரை முன்னேறி 15ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார். அ.தி. மு.க. தலைமைக் கழகத்தில் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம் தொடங்கிய நிலையில், 8-வது சுற்றில் நிலவரம் மாறி, வாக்கு வித்தியாசத்தை வெகுவாகக் குறைக்க, 9-வது சுற்று முதல் தி.மு.க. கதிர்ஆனந்த் லீடிங் எடுத்தார். ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் தொகுதிகளின் முஸ்லிம் வாக்குகளும், அணைக்கட்டு தொகுதியில் தி.மு.க.வின் செல்வாக்கும் அந்த லீடிங்கை 19ஆயிரம் வரை முன்னேற்றியது.
பின்னர், குடியாத்தம் தொகுதியில் ஏ.சி.எஸ்.சுக்கு இருந்த சாதகம் கதிர் ஆனந்த் பக்கம் திரும்ப, வாணியம்பாடியில் அதற்கு நேர் எதிரான நிலை உருவானது. இதனால் கதிர்ஆனந்த்தின் லீடிங் குறைந்து 10ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது. சற்று ஏறுவதும் இறங்குவதுமாக லீடிங்கை மெயின்ட்டெய்ன் செய்தார் கதிர்ஆனந்த். நாம் தமிழர் கட்சி 25ஆயிரம் வாக்குகளைக் கடந்து தன்னைப் பதிவு செய்தது. கடைசி ரவுண்டு வரை நகம் கடிக்க வைத்த கடும் போட்டிக் களமாக அமைந்த வேலூரில், சுமார் 8000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கதிர் ஆனந்த். அறிவாலயத்திலும் வேலூரிலும் கொண்டாட்டம் களை கட்டியது.
எடப்பாடியும் ஸ்டாலினும் நேரடி கோதாவில் இறங்கிய களத்தில், மோடி-இ.பி.எஸ். என இரு ஆளுங் கட்சியின் படையை முறியடித்த தளபதியாகவும் தி.மு.க.வின் எம்.பி. எண்ணிக்கையை உயர்த்தியவராகவும் மு.க.ஸ்டாலின் புன்னகை செய்ய, தி.மு.க.வின் வாக்கு வித்தியாசத்தைக் குறைத்து, மீண்டும் தனது வாக்கு வங்கியை மீட்ட நிம்மதியில் உள்ளது அ.தி.மு.க. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் அடுத்த போட்டிக்கு ரெடியாகின்றன இரு பெரிய கட்சிகளும்.